லக்னோ,
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் ய்ஷ்வந்த் வர்மா. இவர் டெல்லியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதனிடையே, கடந்த 14ம் தேதி ஹோலி பண்டிகையின்போது யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதேவேளை, தீ விபத்தின்போது யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நீதிபதி வீட்டில் உள்ள அறையில் கட்டு கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டிற்கு பணியிடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டிற்கு பணியிடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் பணியாற்ற கூடாது என்றும் அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.