சென்னை: அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சுகாதாரத் துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அதன் விவரம்:
கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் (அதிமுக): எனது தொகுதிக்கு உட்பட்ட பெரியமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் கருவி நிறுவப்படுமா?.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரியிலும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் (திமுக): மாரடைப்பை தடுக்கும் லோடிங் டோஸ் மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு இருப்பு உள்ளதா?
மா.சுப்பிரமணியன்: இந்த அரசு அமைவதற்கு முன்பு வரை இத்தகைய பாதிப்புகள் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்றுதான் மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை இருந்தது. எனவே, மாரடைப்பு, இதய நோய்கள் உள்ளவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் லோடிங் டோஸ் எனப்படும் ஆஸ்பிரின், அடார்வஸ்டேடின் போன்ற 14 மாத்திரைகள் உடனடியாக வழங்கப்பட்டு, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகி்ன்றன. கடந்த 2023 ஜூன் 27-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 15,886 பேர் பயன்பெற்றுள்ளனர்.
அரக்கோணம் எம்எல்ஏ ரவி (அதிமுக): புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுமா?
மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் கூடுதலாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, விதிகளின்படி தேவையான இடங்களில் அமைக்கப்படும்.