தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு ஆணையிட வேண்டும்: அன்புமணி

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தேவை தான். ஆனால், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடி வருகிறது. இந்த நிலையிலிருந்து திராவிட மாடல் அரசு எப்போது மாறப் போகிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தெலங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அடுத்த வாரம் தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடகம், பிஹார், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளது.

ஆந்திரம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் தீபக் பிருவா, ‘‘கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதியே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டது.

அதனடிப்படையில் விதிகள் திருத்தப்பட்டு, அதனடிப்படையில் கடந்த 4-ஆம் தேதி ஆணைகள் வெளியிடப்பட்டு விட்டன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள்? எவ்வளவு செலவாகும்? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா, பிகார், ஜார்க்கண்ட் என ஒவ்வொரு மாநிலமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதன் மூலம் 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது செயல் அளவில் உறுதியாகியுள்ளது.

உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றமும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று எவரேனும் கூறினால் அவர்கள் அறியாமையில் உழல்கின்றனர் அல்லது சமூகநீதிக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று தான் பொருள் ஆகும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் தேவை, அதற்கான வாய்ப்புகள், சாத்தியக் கூறுகள் ஆகியவை குறித்து தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்ட முறையிலும், பொதுத்தளங்களின் வாயிலாகவும் விரிவாக விளக்கியிருக்கிறது. அனைத்தையும் கேட்டுக் கொள்ளும் தமிழக அரசு, ‘‘சாதிவாரி கணக்கெடுப்பு தேவை தான். ஆனால், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடி வருகிறது. இந்த நிலையிலிருந்து திராவிட மாடல் அரசு எப்போது மாறப் போகிறது?

ஒருபுறம் சமூகநீதியைக் காப்பதற்காகவே பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் திமுக, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவகாரத்தில் நடத்தும் நாடகங்கள் காரணமாக மக்களிடம் அம்பலப்பட்டு விட்டனர். இனியும் அதே நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.