புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 4.30 மணிக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் மிகவும் முக்கியமானது, தீவிரமானது என்றும் தெரிவித்தார்
மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று (செவ்வாய்க்கிழமை) அவையில் கூறுகையில், “நீதிபதி வர்மா விவகாரம் தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நான் அவை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் விவாதித்தேன். சந்தேகமில்லாமல் இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. நாங்கள் மூன்று பேரும் இந்த விவகாரத்தை கவனித்து வருகிறோம். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்னெடுப்புகளை பொதுவெளியில் வெளியிடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
என்றாலும் மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எனது முன்னிலையில் அவையில் உள்ள தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவை முன்னவரும் அதனை ஏற்றுக்கொண்டார். அவையில் உள்ள கட்சித் தலைவர்களின் வசதிக்காக இன்று மாலை 4.30 மணிக்கு கூட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளேன். நாம் ஒரு சிறப்பான உரையாடலை நடத்துவோம் மற்றும் ஒரு வழியை முன்னெடுப்போம் என்று நம்புகிறேன். ஏனெனில், நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்படும் போது சிறப்பாக செயல்பட முடியும்.
எந்த ஒரு விஷயம் குறித்தும் நான் ஒரு தீர்மானத்துக்கு வரவிரும்பவில்லை, ஆனாலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனக்கு கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் பொதுவெளியில் பகிர்ந்துள்ளது நாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு கணக்கில் வராமல் கட்டுக்கட்டாக பணக்குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்பு அது குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நீதிபதி வர்மா, அந்தப் பணம் குறித்து தனக்கோ தனது குடும்பத்தாருக்கும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இது தன்னுடைய புகழைக் கெடுப்பதற்கான சதி என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.