சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக 1800 பேர் கடந்த 2002-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் ரூ. 4 ஆயிரத்து 500 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு தற்போது ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியமாகவும், ரூ. 5 ஆயிரம் போக்குவரத்து செலவாகவும் வழங்கப்படுகிறது.இந்நிலையில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களான தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர், “தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிறப்பு குழந்தைகள் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். 10 குழந்தைகளுக்கு 1 ஆசிரியர்கள் என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 13 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஒரு நிரந்தர பணியிடத்தைக்கூட உருவாக்காத தமிழக அரசு 1800 பேரை சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்களாக நியமித்துள்ளது.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இவர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பு என எந்த சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. எனவே தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் இந்த சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வரும் ஏப்.21-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.