புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருக்கும் தீனதயாளன், கடந்த 2024 முதல் அந்த பதவியை வகித்து வருகிறார். கடந்த மார்ச் 22-ம் தேதி காரைக்கால் சென்ற இவர், அன்று மாலை அங்கிருக்கும் சுற்றுலாத்துறை விடுதியில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த விடுதியை சுற்றி வளைத்த சி.பி.ஐ அதிகாரிகள், அங்கு லஞ்சப் பணத்தை கைமாற்றிக் கொண்டிருந்த தீனதயாளன், காரைக்கால் செயற்பொறியாளர் சிதம்பரநாதன், மன்னார்குடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் இளமுருகு உள்ளிட்டவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அத்துடன் அவர்களது செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

அதே நேரத்தில் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்கள் மற்றும் தீனதயாளன் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும், சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். விடிய விடிய நடைபெற்ற இந்த விசாரணையும், சோதனையும் மறுநாள் 23-ம் தேதி நண்பகல் 1 மணி வரை நீடித்தது. அப்போது அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் காரைக்காலில் ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் காரைக்காலில் சாலை அமைக்கும் பணிக்காக, மன்னார்குடியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் இளமுருகுவிடம் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கின்றனர். அதன் முதல் தவணை ரூ.2 லட்சத்தை கொடுக்கும்போதுதான் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக வளைத்திருக்கின்றனர்.
அதையடுத்து தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகு உள்ளிட்டவர்களை கைது செய்த சி.பி.ஐ அதிகாரிகள், நீதிபதியிடம் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளைச் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தீனதயாளன் அலுவலகத்தை ஆய்வு செய்த சி.பி.ஐ அதிகாரிகள், அங்கிருந்த ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு அறைக்கு சீல் வைத்தனர். அதேபோல ரெட்டியார்பாளையம் பகுதியில் ஆதித்யா அவென்யூவில் இருக்கும் தினதயாளன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம், காரைக்காலில் உள்ள சிதம்பரநாதன் வீட்டில் ரூ.8 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.

அத்துடன் சொத்துகள் பத்திரங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியிருப்பதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கைது மற்றும் விசாரணை தொடர்பாக சி.பி.ஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `காரைக்காலில் ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் காரைக்காலில் சாலை அமைக்கும் பணிக்காக, மன்னார்குடியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் இளமுருகுவிடம் ஒப்பந்தத் தொகையில் சுமார் 1% சதவிகிதம் என தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கின்றனர். அதற்கான பணப்பரிமாற்றத்தின் போதுதான், தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகளின் நிச்சயதார்த்த விழாவை புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடத்திய தீனதயாளன், அதற்கு லட்சக்கணக்கில் பணத்தை வாரியிறைத்திருந்தார். தற்போது திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்த தீனதயாளன், அதற்காக பத்திரிகைகளை வைத்துக் கொண்டிருந்தார். அதற்காக காரைக்கால் சென்றிருந்தபோதுதான், இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது” என்கின்றனர் பொதுப்பணித்துறை ஊழியர்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/ParthibanKanavuAudioBook
