மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நகைச்சுவையாக விமர்சித்ததை அடுத்து ஆளும் கூட்டணியின் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ள ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா, தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், இந்த கும்பலைக் கண்டு தான் பயம் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு எதிராக எடுக்கப்பட்ட எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அஜித் பவார் (முதல் துணை முதல்வர்) மற்றும் ஏக்நாத் ஷிண்டேவைப் (2வது துணை முதல்வர்) பற்றித்தான் நான் பேசினேன். இந்தக் கும்பலைக் கண்டு நான் பயம் கொள்ளவில்லை. நான் என் படுக்கையின் கீழ் ஒளிந்துகொண்டு, பிரச்சினை ஓயட்டும் என காத்திருக்க மாட்டேன்.
ஹாபிடேட் ஸ்டுடியோவிற்குள் நுழைந்து சிவசேனா தொண்டர்கள் அதை நாசப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, ஒரு பொழுதுபோக்கு இடம் வெறும் ஒரு தளம். எல்லா வகையான நிகழ்ச்சிகளுக்குமான இடம் அது. எனது நகைச்சுவைக்கு ஹாபிடட் (அல்லது வேறு எந்த இடம்) பொறுப்பல்ல. ஒரு நகைச்சுவை நடிகரின் வார்த்தைகளுக்காக ஒரு இடத்தைத் தாக்குவது தக்காளி ஏற்றிச் செல்லும் லாரியை கவிழ்ப்பது போன்ற முட்டாள்தனம்.
எனக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என அச்சுறுத்தும் அரசியல் தலைவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இன்றைய ஊடகங்கள் எங்களை வேறுவிதமாக நம்ப வைக்க முயற்சித்தாலும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான நமது உரிமை, சக்திவாய்ந்தவர்களையும் பணக்காரர்களையும் விமர்சிக்கக்கூடாது என்பதையே. எனக்குத் தெரிந்தவரை, நமது தலைவர்களையும் நமது அரசியல் அமைப்பான சர்க்கஸையும் வேடிக்கை பார்ப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல.
நகைச்சுவையால் புண்படுத்தப்பட்டால், நாசவேலைதான் அதற்கு சரியான பதில் என்று முடிவு செய்தவர்களுக்கு எதிராக சட்டம் நியாயமாகவும் சமமாகவும் பயன்படுத்தப்படுமா? இன்று ஹாபிடேட் ஸ்டூடியோவுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் வந்து, அந்த இடத்தை இடித்த மும்பை மாநகராட்சியின் நடவடிக்கை மற்றவற்றுக்கு எதிராகவும் இருக்குமா? ஒருவேளை எனது அடுத்த இடத்தை, எல்பின்ஸ்டோன் பாலம் அல்லது மும்பையில் விரைவாக இடிக்கப்பட வேண்டிய வேறு எந்த கட்டமைப்பையும் நான் தேர்வு செய்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.