ரிக்கி பாண்டிங் செய்த அந்த மாற்றம் – பஞ்சாப் அணிக்கு கிடைத்தது வெற்றி… GT தோற்றது எங்கே?

IPL 2025 GT vs PBKS: ஐபிஎல் 2025 தொடரில் 5வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள், குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மோதின.

GT vs PBKS: பவர்பிளேவில் பஞ்சாப் மிரட்டல்

இந்த போட்டியும் எதிர்பார்த்ததை போலவே ஹை-ஸ்கோரிங் போட்டியாகவே அமைந்தது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில், பிரப்சிம்ரன் சிங் உடன் பிரியான்ஷ் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓபனராக களமிறங்கினார். 

பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும் பிரியான்ஷ் ஆர்யா அதிரடி காண்பித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் வந்ததில் இருந்து பவுண்டரிகளையே குறிவைத்தார் எனலாம். இரண்டாவது இடத்திற்கு 51 ரன்கள் எடுக்கப்பட்டது. பிரியான்ஷ் ஆர்யாவை 47 ரன்களில் ரஷித் கான் ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 23 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸரை அடித்திருந்திருந்தார்.

GT vs PBKS: கடைசி 28 பந்துகளில் 81 ரன்கள் 

ஷ்ரேயாஸ் ஒருபக்கம் அதிரடியை தொடர்ந்தாலும், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 16, மேக்ஸ்வெல் 0, ஸ்டாய்னிஸ் 20 என சுமாராக அடித்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருடன், ஷஷாங்க் சிங் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.  15.2 ஓவரில் 162 ரன்களை பஞ்சாப் எடுத்திருந்த போது, ஷ்ரேயாஸ் – ஷஷாங்க் சிங் ஜோடி இணைந்தது. அதாவது 28 பந்துகளில் இந்த ஜோடி 81 ரன்களை குவித்தது.

இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை அடித்தது. பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 9 சிக்ஸர், 5 பவுண்டரி என 97 ரன்களையும், ஷஷாங்க் சிங் வெறும் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரி என 44 ரன்களையும் அடித்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சில் சாய் கிஷோர் மட்டும் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

GT vs PBKS: கில் – சுதர்சன் நல்ல தொடக்கம்

தொடர்ந்து 244 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமும் சிறப்பாகவே கிடைத்தது. கில் ஒருமுனையில் அதிரடி காட்டினாலும் சாய் சுதர்சன் மறுமுனையில் நிதானமாகவே விளையாடினார். அப்படியிருக்க பவர்பிளேவின் கடைசி ஓவரில் சுப்மன் கில்லை மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் என 33 ரன்களை அடித்திருந்தார்.

GT vs PBKS: ஷ்ரேயாஸ் ஐயர் செய்த செயல்

அடுத்து ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் – பட்லர், 2வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்க்கப்பட்டது. சாய் சுதர்சன் சுழற்பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். ஆனால், அவர் ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களிடம் திணறிவந்ததார். எனவே அந்த நேரத்தில், வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை 13வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் கொண்டு வந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே சாய் சுதர்சனின் விக்கெட் கிடைத்தது. அவர் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 74 ரன்களை சேர்த்தார்.

GT vs PBKS: இம்பாக்ட் வீரராக வந்த வைஷாக் விஜயகுமார்

குஜராத் அணிக்கு ஷெர்பேன் ரூதர்போர்ட் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். 13வது ஓவர் முடிந்த உடன் பஞ்சாப் அணியின் இம்பாக்ட் வீரராக வைஷாக் விஜயகுமார் உள்ளே வந்தார். இம்பாக்ட் வீரராக வைஷாக் விஜயகுமார் வருவாரா, ஹர்பிரீத் பிரர் வருவாரா என எதிர்பார்ப்புகள் இருந்தது. இடது கை பேட்டராக ரூதர்போர்ட் வந்த உடன் டெத் ஓவரை மனதில் வைத்தில், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் வைஷாக் விஜயகுமாரை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் களமிறக்கியது. 

இந்த முடிவுதான் பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பை கொண்டுவந்தது. வைஷாக் விஜயகுமாருக்கு 15வது ஓவரை வீச பந்து கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் ரூதர்போர்டுக்கு வைட் யார்க்கர் வீசி அவரை திணறடித்தார். பட்லரும் இவரது யார்க்கரில் ரன்களை அடிக்க திணறினார். பவர்பிளே முடிந்து 7வது ஓவர் முதல் 14வது ஓவர் வரை, ஓவரின் முதல் பந்தில் பவுண்டரிகள் தொடர்ந்து அடிக்கப்பட்டு வந்தது.

GT vs PBKS: ஆட்டத்தை மாற்றிய வைஷாக்

ஆனால், வைஷாக் வீசிய 15வது ஓவர் முழுவதுமே பவுண்டரிகள் வரவில்லை. அந்த ஓவரில் 5 ரன்களே கொடுக்கப்பட்டது. அடுத்து யான்சன் வீசிய 16வது ஓவரில் பவுண்டரிகளே இல்லாமல் 8 ரன்கள் எடுக்கப்பட்டது. அதேபோல், வைஷாக் வீசிய 17வது ஓவரில் மூன்று வைட்கள் சேர்த்து 5 ரன்களே குஜராத்தால் எடுக்கப்பட்டது. இந்த மூன்று ஓவர்களில் வெறும் 18 ரன்களே கொடுக்கப்பட்டது. 

18வது ஓவரில் 2  பவுண்டரி அடிக்கப்பட்டாலும் கடைசி பந்தில் பட்லரின் விக்கெட் யான்சனுக்கு கிடைத்தது. பட்லர் 33 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 54 ரன்களை சேர்த்து வெளியேறினார். அந்த ஓவரிலும் 12 ரன்களே அடிக்கப்பட்டது. தெவாட்டியா உள்ளே வர, 19வது ஓவரை வைஷாக் வீசினார். ஆனால், இந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடைசி ஓவரில் 27 ரன்கள் குஜராத்துக்கு தேவைப்பட்டது.

GT vs PBKS: கடைசி ஓவர் டிராமா

கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலேயே நான்-ஸ்ட்ரைக்கில் இருந்த தெவாட்டியா ரன்-அவுட்டாக ஆட்டம் மொத்தமாக மாறியது. 2வது பந்தில் ரூதர்போர்ட் சிக்ஸர் அடித்தார். 3வது பந்தில் 2 ரன்களை சேர்த்தார். ஆனால், 4வது பந்தில் ரூதர்போர்ட் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 46 ரன்களை அடித்திருந்தார். 5வது பந்தில் அர்ஷத் கான் 1 ரன் அடிக்க, 6வது பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் அடித்து 20 ஓவர்களை நிறைவு செய்தார்.

Match 5.Punjab Kings Won by 11 Run(s).https://t.co/PYWUriwSzY #GTvPBKS #TATAIPL #IPL2025

— IndianPremierLeague (@IPL) March 25, 2025

GT vs PBKS: குஜராத் தோற்றது எங்கே?

இருப்பினும் குஜராத் அணியால் இலக்கை எட்ட இயலவில்லை. பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். பஞ்சாப் அணி வைஷாக்கை இம்பாக்ட் வீரராக கொண்டு வந்ததே அவர்களுக்கு வெற்றியை தேடி தந்தது எனலாம். அதேபோல், ரூதர்போர்ட் இம்பாக்ட் வீரராக வந்ததே தோல்விக்கு காரணம் என்றும் கூறலாம். அவருக்கு பதில் ஷாருக் கான் முன்னர் கொண்டுவந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. 15வது ஓவர் வரை ஆட்டம் குஜராத்தின் கைகளிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.