தற்போதைய ஐபிஎல் அணிகளில் பந்து வீச்சில் மிக மோசமாக இருக்கும் அணி என்றால் அது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தான். அந்த அணி பந்து வீச்சாளர் மோஷின் கான் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராகதான் ஷர்துல் தாக்கூரை அந்த அணி கொண்டு வந்தது. அதேபோல் மயங்க் யாதவ், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர்.
நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி சிறப்பாக விளையாடி 209 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியை அச்சுறுத்தினாலும், லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் என யாரும் கூறும்படி இல்லை.
மேலும் படிங்க: குஜராத் பந்து வீச்சை சிதறடித்த இளம் வீரர்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?
முழுக்க முழுக்க அந்த அணி ஷர்துல் தாக்கூரை நம்பியே இருந்தது. ஷர்துலும் ஒரு முழு வேகப்பந்து வீச்சாளர் கிடையாது. அவர் கிட்டதட்ட ஆல்-ரவுண்டர் கணக்கில் வந்து விடுவார். எனவே ஒரு பிரதான வேகப்பந்து வீச்சாளர் லக்னோ அணியில் இல்லை. இது லக்னோ அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.
லக்னோவுக்கு திரும்பும் ஆவேஷ் கான்
இந்த நிலையில் தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதாவது முழங்கால் காயத்தால் அவதிபட்டு வந்த ஆவேஷ் கானுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சிறப்பு மையத்தில் இருந்து உடற்தகுதி அனுமதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணத்தால், ஆவேஷ் கான் விரைவில் லக்னோ அணியில் இணைவார் என கூறப்படுகிறது. குறிப்பாக அவர் லக்னோ அணியின் அடுத்த போட்டியிலேயே களம் இறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஆவேஷ் கான் விரைவில் அணிக்கு திரும்பும் பட்சத்தில் அது அந்த அணிக்கு சிறிது பலத்தை சேர்க்கும்.
மேலும் படிங்க: கே.எல். ராகுலை போல ரிஷப் பண்ட்டை திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?