புதுடெல்லி: நன்மையை கருத்தில் கொண்டே அரசாங்கம் வக்ஃப் வாரியத்தில் திருத்தங்களைச் செய்து வருகிறது என்றும், இதனால் எந்த மத சுதந்திரமும் பறிக்கப்படாது என்றும் வக்ஃப் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த அரசாங்கம் வக்ஃபில் திருத்தங்களைச் செய்வதன் நோக்கம் நன்மைக்காக மட்டுமே. இது எந்த மத சுதந்திரத்தையும் பறிக்காது. வக்ஃப் வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு, ஒரு மத அமைப்பு அல்ல.
அசாதுதின் ஒவைசி நாட்டை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தை ஜேபிசி அழைத்திருந்தது. ஆனால் அதன் பிறகும், அவர்கள் டெல்லியில் போராட்டங்களை நடத்தினர். மசோதா முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே இருக்கும். வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுவது முஸ்லிம்களையும் நாட்டின் சிறுபான்மையினரையும் தவறாக வழிநடத்தும் முயற்சி.” என தெரிவிதுள்ளார்.
முன்னதாக, முன்மொழியப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இது குறித்து ஏஐஎம்பிஎல்பி-யின் அலுவலகச் செயலாளர் முஹ்த் வக்கர் உத்தின் லத்திஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 17-ம் தேதி டெல்லியில் நடந்த மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான போராட்டத்தைத் தொடர்ந்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முன்மொழியப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டத்தை அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய, பாரபட்சமான மற்றும் சேதம் விளைவிக்கக் கூடிய அந்த மசோதாவை எதிர்க்க அனைத்து அரசியலமைப்பு, சட்ட மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஏற்றுக்கொள்வது என்று ஏஐஎம்பிஎல்பி-யின் 31 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தின் முதல்கட்டமாக அதன் ஒரு பகுதியாக மார்ச் 26-ம் தேதி பாட்னாவிலும், 29-ம் தேதி விஜயவாடாவிலும் மாநில சட்டப்பேரவை முன்பு பெரிய அளவிலான போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வாரியம், நாடு தழுவிய அளவில் போராட்டத்துக்கான திட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி, மாநில தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும். அதேபோல் மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தர்ணாக்கள் ஒருங்கிணைக்கப்படும். அதேநேரத்தில் மாவட்ட நீதிபதிகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அளிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.