வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரி விதிப்புகளை விதித்து வருகிறார் ட்ரம்ப். இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா 2-வது தவணையாக கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா, வெனிசுலா ஆகிய 2 நாடுகளுக்கு இடையேயான மோதல் நீண்டகாலமாக நீண்டகாலக நடந்து வரும் சூழலில் அதிக அளவில் குற்றவாளிகளையும், போதை பொருட்களையும்ம் அமெரிக்காவுக்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
ஏற்கெனவே வெனிசுலா மீது கூடுதல் வரியை அமெரிக்கா விதித்திருந்த நிலையில் தற்போது 2-வது தவணையாக 25 சதவீத கூடுதல் வரியை அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரும் 2-ம் தேதி முதல் புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்தியா, வெனிசுலாவிலிருந்து 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் இது சுமார் ஒரு சதவீதம்(0.93 சதவீதம்) மட்டுமே.
இந்நிலையில் தற்போது வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இந்தியா, தொடர்ந்து வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்றால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி அதிக அளவில் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில், வெனிசுலாவில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மட்டுமே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.