பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!
ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பெங்களூரிலிருந்து ஆக்ஷனில் இடம்பெயர்ந்த முகமது சிராஜ், குஜராத் அணிக்காக தனது முதல் ஓவரை வீசினார். பிரப்சிம்ரன் மற்றும் பிரயன்ஸ் ஆர்யாவும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களத்தில் இறங்கினர்.

ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே தனது அறிமுகப் போட்டியின் முதல் ரன்னை, பவுண்டரியைப் பறக்கவிட்டுத் தொடங்கினார் ஆர்யா. அடுத்து, லெக் பைஸ் மூலம் ஒரு பவுண்டரி வாங்கினாலும், கடைசி மூன்று பந்துகளை டாட் பால்களாக்கி, 8 ரன்களுடன் முதல் ஓவரை முடித்தார் சிராஜ். அடுத்து வந்த ரபாடா, ஆர்யாவின் விக்கெட்டைக் குறிவைக்க, அர்ஷத் கான், ரஷீத் கான் ஆகிய இருவரும் ‘நீ பிடி, நான் பிடி’ என எளிதான வாய்ப்பைத் தவறவிட்டனர். இதைப் பயன்படுத்திய ஆர்யா, சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு ஃபோர் என ‘தப்பு பண்ணிட்ட சிங்காரம்’ என வெளுத்துவிட்டார். ஆனால் அடுத்த ஓவரில் பிரப்சிம்ரனின் 5(8) விக்கெட்டை வீழ்த்தி ரபாடா கம்பேக் கொடுத்தார் . முந்தைய தவறைத் திருத்திய அர்ஷத் கான், இம்முறை கேட்சைப் பத்திரமாகப் பிடித்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், அருமையான பவுண்டரியுடன் பஞ்சாபின் புதிய கேப்டனாக ரன் கணக்கைத் தொடங்கினார். ஏற்கனவே ஆர்யாவின் கேட்சைத் தவறவிட்டு புண்பட்ட அர்ஷத் கான், ஐந்தாவது ஓவரை வீச வந்தபோது, ‘4, 4, 6, 4’ என மீண்டும் பவுண்டரி பின்கோடுகளைப் போட்டு அவரை மீண்டும் புண்படுத்தினார் ஆர்யா. இந்நிலையில் பவர்பிளே முடிவில், 73/1 என்ற வலுவான நிலையில் இருந்தது பஞ்சாப்.
சூறாவளியாகச் சுழன்ற ஸ்ரேயாஸ்
இதையடுத்து பில்டர்கள் பவுண்டரிக்கு அரணாகப் பின்னால் செல்ல, மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கையில் பந்து வந்தது. முதல் பந்தில் பவுண்டரி கொடுத்தாலும், அதே ஓவரில் வளர்ந்து வந்த பார்ட்னர்ஷிப்பை ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தி முடிவுக்குக் கொண்டுவந்தார். முதல் போட்டியிலேயே அரைசதத்தை நெருங்கிய ஆர்யா 47 (23), ரஷீதின் கூக்லியைக் கணிக்கத் தவறி லீடிங் எட்ஜ் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து வந்த பிரஷீத் கிருஷ்ணாவை, ஸ்ரேயாஸ் ஒரு பவுண்டரியுடன் வரவேற்க அந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரைச் சிக்கனமாக வீசிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர், 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ரன் ரேட்டினை கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் முடிவில், அணியின் ஸ்கோர் சதத்தைக் கடந்து 104/2 என்ற நிலைக்கு வந்தது.

இதையடுத்து, ஓமர்சாய் 16 (15), மேக்ஸ்வெல் 0 (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, ‘கில்லி’ வேலுவைப் போல பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாகப் பறக்கவிட்டார் சாய் கிஷோர். இதன்மூலம், ரோஹித் சர்மாவின் (18 முறை) அதிக முறை டக் அவுட்டான மோசமான சாதனையை, கோல்டன் டக் மூலம் மேக்ஸ்வெல் (19 முறை) முறியடித்தார். 12வது ஓவரை வீசிய ரஷீத் கானும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். வேகமாக ஏறிய ரன் ரேட், பங்குச் சந்தை போலக் குறையத் தொடங்கியது. ஆனால், ‘அந்த ஸ்கிரிப்ட் எல்லாம் இங்க இல்ல’ என்பதுபோல, அடுத்து வீச வந்த சாய் கிஷோர் மற்றும் ரஷீத் கான் ஆகியோரின் சுழலையும் இரண்டு, இரண்டு சிக்ஸர்களாக மாற்றி ட்ரில் எடுத்தார் ஸ்ரேயாஸ். இறங்கிய ரன் ரேட் மீண்டும் ஏறுமுகமாக மாற, 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார் கேப்டன் ஸ்ரேயாஸ்.
அதிரடி காட்டிய ஷஷாங்க் சிங்
சிராஜின் அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ். இதன்மூலம், 15 ஓவர்கள் முடிவில் 156/4 என்று ‘200 நிச்சயம், 250 லட்சியம்’ என்ற நிலை உருவானது. தனது கடைசி ஓவரை வீச வந்த சாய் கிஷோர், இம்முறையும் பார்ட்னர்ஷிப் பிரேக்கராக ஸ்டானிஸின் விக்கெட்டை 20 (15) ரன்களில் வீழ்த்தினார். அடுத்து வந்த பிரசித் கிருஷ்ணாவின் ஓவரை ‘அடிச்சா சிக்ஸர், எடுத்தா பவுண்டரி’ என 6, 4, 6, 6 என மீண்டும் பின்கோடு போட்டு வெளுத்து வாங்கினார் ஸ்ரேயாஸ். சென்ற முறை திடீர் நாயகன் அவதாரம் எடுத்த ஷஷாங்க் சிங், இம்முறையும் அதே பார்மைப் பின்தொடர்ந்து, ரஷீத் கானின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு ஃபோர் என பந்தைப் பதம் பார்த்தார். அதேபோல, சிராஜ் வீசிய இறுதி ஓவரில் 5 பவுண்டரிகளை விரட்டி, முரட்டு கேமியோ பினிஷ் கொடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 97 (42), ஷஷாங்க் சிங் 44 (16) இறுதிவரை களத்தில் நின்ற ஜோடி, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 243 ரன்களைச் சேர்த்தனர்.

244 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கினர் குஜராத் அணியின் சாய் கிஷோர் – கில் ஜோடி. ஏலத்தில் பட்டையைக் கிளப்பிய அர்ஷ்தீப் சிங்கின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் சாய் சுதர்ஷன். ஆனால், சுதாரித்துக்கொண்ட அர்ஷ்தீப் அதன் பின்னர் சிக்கனமாகப் பந்துவீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர் போனாலும், மூன்று ஓவர்கள் முடிவில் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர்.

சண்டை செய்த கில்
“தம்பி, தம்பி, ODI மோடுல இருந்து வெளிய வாங்கப்பா!” என்று ரசிகர்களின் குரல் கேட்டதோ என்னவோ, பைன் லெக், மிட் விக்கெட் ஆகிய திசைகளில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு ஃபோர் என ஓமர்சாயின் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தள்ளி, ஆட்டத்தின் போக்கை டி20 மோடுக்கு மாற்றினார் கில். ஜான்சனின் ஐந்தாவது ஓவரையும் “பங்க பிரி, பங்க பிரி” என ஆளுக்கு ஒரு சிக்ஸர் போட்டு பிரித்து மேய்ந்தனர். இந்நிலையில், பவர்ப்ளேயின் கடைசி ஓவரை சூழலுக்கு ஏற்ப சுழலுக்கு மாற்றி சோதனை செய்தார் ஸ்ரேயாஸ். அவரது யுக்தி வேலை செய்ய, மேக்ஸ்வெல் பந்தில் இறங்கி ஆட நினைத்த கில் 33(14) ரன்களுடன் ஆர்யாவிடம் தஞ்சமடைந்தார். இதனால், 6 ஓவர்கள் முடிவில் 61-1 என்ற நிலையை அடைந்தது குஜராத் அணி.
சமர் செய்த சாய் சுதர்சன்
ஸ்டாய்னிஸ் வீசிய 7ஆவது ஓவரில் அதிர்ஷ்டம் சுதர்ஷன் பக்கம் வீச, எட்ஜில் பவுண்டரிகள் கிடைத்தன. அதில் ஒரு கஷ்டமான கேட்சை ஓமர்சாய் தவறவிட, அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. “காத்து கீழ, காத்து மேல” என சஹால் ஓவரில் 7 ரன்கள், யான்சன் ஓவரில் 11 ரன்கள், மீண்டும் சஹால் ஓவரில் 11 ரன்கள் என ரன் வேகம் இறங்கி ஏறினாலும், தேவையான ரன் ரேட் ஓவருக்கு ஓவர் ஏறிக்கொண்டே போனது. பத்து ஓவர்கள் முடிவில் 104-1 என்ற நிலையை எட்ட, ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை குஜராத்துக்கு உருவானது.11ஆவது ஓவரை மேக்ஸ்வெல் வீச, சுதர்ஷனின் எளிதான கேட்சைத் தவறவிட்டார் ஸ்ரேயாஸ். இதைப் பயன்படுத்திக்கொண்ட சுதர்ஷன் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 17 ரன்களைச் சேர்த்தார். அடுத்த ஓவரில் சஹாலுக்கும் அதே பவுண்டரி ட்ரீட்மென்ட் 4, 6, 4கொடுக்கப்பட்டு, மேலும் 17 ரன்கள் சேர்க்கப்பட்டன. சுழலை மாற்றி, அர்ஷ்தீப் சிங்குக்கு பந்தைக் கொடுத்தார் ஸ்ரேயாஸ். ஆனால், பட்லர் லாங் ஆன் திசையில் மிரட்டலான சிக்ஸர உடன் பறக்கவிட, “நாங்களும் சளைத்தவர்கள் அல்ல” என பேட்டில் பதில் சொல்லிக்கொண்டிருந்தது இந்த ஜோடி.

“கேம் ஆன்” என்று எல்லோரும் நிமிர்ந்து உட்காரும் அந்த நேரத்தில், சுதர்ஷனின் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். 41 பந்துகளில் 74 ரன்களைச் சேர்த்த அவரது அருமையான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இம்பேக்ட் பிளேயராக களத்துக்கு வந்த ரதர்ஃபோர்டு, அவர் விட்டுச் சென்ற பேட்டை விடாமல், ஸ்டாய்னிஸின் பந்தை “அடித்தால் அடி, இடித்தால் இடி” என இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ரன் ரேட்டை மெயின்டெய்ன் செய்தார். 14 ஓவர்கள் முடிவில் 169-2 என்ற நிலையில், இறுதி 36 பந்துகளில் 75 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற 60-40 நிலையில் இருந்தது.ஒவ்வொரு ஓவரும் முக்கியம் என்ற நிலையில், “இம்பேக்ட்” பிளேயராக இறங்கிய வைசாக், 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அழுத்தத்தை அதிகரித்து “இம்பேக்ட்” செய்தார். யான்சனின் கட்டுப்படுத்தப்பட்ட அடுத்த ஓவரிலும் 8 ரன்களே சேர, 24 பந்துகளில் 62 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
`நான் இப்படித்தான் போடுவேன் – நீ முடிஞ்சா அடி’
“கர்ணம் தப்பினால் மரணம்” என்ற சூழலில், அடுத்த ஓவரை வீச வந்த வைஸாக், வைட் யார்க்கர் என்ற சூத்திரத்தை ரதர்ஃபோர்டு மீது ஏவினார். அது வேலை செய்ய, மூன்று வைடுகள், நான்கு டாட்கள் என 5 ரன்கள் மட்டுமே சென்று பலன் கிடைத்தது. அடுத்த ஓவரை வீச வந்த யான்சன் 12 ரன்கள் கொடுத்தாலும், பட்லரை போல்டு எடுத்து வெளியேற்றினார். 12 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழல் உருவானது.

அதே மாதிரியான வைட் லெந்தில் பந்துகளை வைஸாக் இறக்க, இம்முறை 18 ரன்கள் சென்றன. கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், அர்ஷ்தீப் சிங் வீச, முதல் பந்தை ரதர்ஃபோர்டு நேராக அடிக்க, பவுலரின் விரல் நுனி பட்டு திவாடியா 6(2) ரன் அவுட் ஆனார். அடுத்த பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டாலும், அதைத் தொடர்ந்து வந்த யார்க்கரில் ஸ்டம்ப் பறக்க, ரதர்ஃபோர்டு 46(28) பெவிலியனுக்கு திரும்பினார். இறுதிப் பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் பறக்கவிட்டாலும், 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.