Manoj Bharathiraja: அப்பாவின் ஆசை; ஷங்கரின் துணை இயக்குநர்; மனோஜின் 26 வருட சினிமா பயணம்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா (48) இன்று (மார்ச் 25) மாரடைப்பினால் காலமானார். அவரின் வாழ்க்கை குறித்து ஒரு பார்வை:

1976 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன் தந்தையின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தனக்கு இயக்குநராக வேண்டும் என்பதுதான் கனவு எனவும் தன் தந்தை சொன்ன காரணத்தால் தான் நடிகரானதாகவும் பல நேர்காணல்களில் பின்னாட்களில் தெரிவித்திருந்தார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் தன் முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடி கவனிக்கவைத்தார் மனோஜ் பாரதிராஜா.

பதினாறு வயதினிலே திரைப்பட விழா

தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றினார். இதில் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில் ஏற்கனவே நல்ல வரவேற்பு பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா ‘ பாடல் தற்கால இளைஞர்களால் சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது.

நடிகர்கள் சரத்குமார், முரளி உடன் இணைந்து இவர் நடித்த சமுத்திரம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த தம்பி கதாபாத்திரம் பலருக்கும் மிகவும் பிடித்து மனதில் பதிந்த கதாபாத்திரமாகும்.

நடிகராவதற்கு முன்பு பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார். இவர் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தியேட்டர் ஆர்ட்ஸ் பயின்றதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆன பின்பும் பல திரைப்படங்களில் துணை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான எந்திரன் திரைப்படத்தில் இவர் ஒரு துணை இயக்குநர் என்பது சமீபத்தில் வெளியான ஷூட்டிங் புகைப்படங்களின் மூலம் தெரிய வந்தது. சிட்டி வேடத்தில் ஷூட்டிங் எடுத்ததில் நிறைய காட்சிகள் இவர்தான் டூப் ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துடன் மனோஜ் பாரதிராஜா

நாயகனாக பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை. எனினும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வந்தார். பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றி வந்தார். விருமன் ,மாநாடு, ஈஸ்வரன் போன்ற திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

மாநாடு படப்பிடிப்பு சமயத்தில் மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரனுடன் நல்ல நட்பு பாராட்டி வந்த இவர்,அவரது திரைப்படங்களில் தன் தந்தையுடன் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

மேலும் தனது இயக்குநர் பயணத்தை மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் துவங்கினார் மனோஜ். புது முகங்களை வைத்து இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் இவரின் தந்தை பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தன் உடன் நடித்த நாயகி நந்தனாவைக் கதாலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பயணத்தில் ஈடுபட போவதாகவும் அவர் அந்த சமயத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.

தன் வாழ்வில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் சினிமாவில் பயணித்துள்ளார் இவர், சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இயக்குநர் பேரரசு அளித்துள்ள தகவலின்படி நாளை மருத்துவ சோதனைக்காக செல்லவிருந்தவர், எதிர்பாராத விதமாக இன்று மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.