இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பிரபரலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

கடந்த சில நாட்களாக அவர் நடித்த படம் ஒன்றில் ஒலித்த எங்கே அந்த வெண்ணிலா பாடல் ஏனோ மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அந்தப் பாடலின் வீடியோவைப் பல முறை பார்த்தேன்.
மிகக் குறைந்த வயதில் மரணம் அவரைப் பறித்துக்கொண்டு போனது பெருந்துயரம். திரு பாரதிராஜா அவர்களை எதைச் சொல்லி ஆறுதல்படுத்த முடியும்?” என வேதனையைப் பகிர்ந்திருந்தார்.
பாரதிராஜா இயக்கிய `தாஜ் மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அப்படத்திற்குப் பிறகு `சமுத்திரம்’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரிச்சயமான அவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மார்கழி திங்கள் படத்தின மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இவர் கடைசியாக கடந்தாண்டு வெளியான `ஸ்நேக் அன்ட் லாடர்ஸ்’ வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

48 வயதான மனோஜ் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு முதல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.