நாட்டின் முதல் ஜவுளி இயந்திர பூங்கா உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அமைகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் ஜவுளி இயந்திரங்கள் இனி இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.
மத்திய ஜவுளித் துறை சார்பில் மாநில அரசுகளுடன் இணைந்து பி.எம். மித்ரா பூங்காங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட 7 மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ஜவுளிச் சந்தை, 350 பில்லியன் டாலர்களாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இயந்திரங்களுடன் அவற்றின் பராமரிப்பு மற்றும் உபகரணங்களுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் தேவை ஏற்படும்.
தற்போது, ஜவுளித் துறை தொடர்பான இயந்திரங்கள் சீனா, தைவான், வியட்நாம், தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்களின் இறக்குமதிக்காக ரூ40,000 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த இயந்திரங்களை இந்தியாவில் தயாரிக்க உ.பி.யில் ஜவுளி இயந்திரப் பூங்கா அமைக்கப்படுகிறது. இது கான்பூரின் போக்னிபூருக்கு அருகில் சப்பர்கட்டா என்ற கிராமத்தில் 875 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.
இந்தப் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள 35 நிறுவனங்களுடன் உ.பி. அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உள்நாட்டுத் தேவை போக, இங்கிருந்து ரூ.30,000 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள், அதன் உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படவும் உள்ளது.
உ.பி.யின் லக்னோவில் அமையும் பி.எம்.மித்ரா பூங்கா அன்றி மேலும் 10 தொழில் பூங்காக்களை மாநில அரசு அமைக்கிறது. அதில் ஒன்றாக அமையும் இந்த ஜவுளி இயந்திர பூங்கா சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.