காசாவை விட்டு வெளியேறுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் போராட்டம்

காசா:

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். காசா நகரின் உள்கட்டமைப்பு முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது.

போரை நிறுத்துவதற்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, இரு தரப்பிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது.

இன்னும் 59 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. காசாவின் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது. இதனால் மக்களின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

17 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், காசாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.

இந்நிலையில் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். ‘போரை நிறுத்து’, ‘போரை முடிவுக்குக் கொண்டு வா’, ‘நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை’, ‘எங்கள் குழந்தைகளின் ரத்தம் மலிவானது அல்ல’ போன்ற முழக்கங்களை அந்த மக்கள் எழுப்பினர். மேலும் “ஹமாசே வெளியேறு” என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். பொதுமக்களுக்கு டெலிகிராம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

காசா நகரத்தை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.