செங்கல்பட்டு: சட்டமன்றத்தில் சபாநாயகர் எதிர்க்கட்சிகள் யாரையும் பேசவிடாமல் தடுக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று பேசியதாவது: இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச துவங்கினால் மைக் கட் ஆகிறது. கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம் என எதையும் கொண்டு வர முடியவில்லை.
தற்போது இருக்கும் சபாநாயகர் யாரையும் பேசவிடாமல் அவரே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார் . அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் திமுகவில் நிலைமை வேறு. கருணாநிதி ஆட்சியிலும் சரி, ஸ்டாலின் ஆட்சியிலும் சரி எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது . ஜனநாயக படுகொலை தான் இன்றைக்கு நடைபெறுகிறது. ஆக்கபூர்வமாக எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்தை கேட்க கூட இந்த ஸ்டாலின் அரசு தயாராக இல்லை.
ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பிறகு நான்கு ஆண்டுகளில் 4.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற இந்த ஸ்டாலின் அரசால் மக்களின் மீது கடன் சுமை அதிகரித்துள்ளது. இன்றைக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் தங்களின் உரிமைக்காக போராட்ட துவங்கி விட்டனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில்தான் இந்த அரசு உள்ளது.
திமுகவில் அடாவடித்தனம், அராஜகம், அட்டூழியம், அநியாயம், கட்டப்பஞ்சாயத்து இவையெல்லாம் சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தினந்தோறும் பாலியல் வன்கொடுமை, வன்முறை கலாச்சாரங்கள், கொலை, கொள்ளை, செயின் பறிப்பு இதுதான் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் எதிர்பார்ப்பது நிம்மதியான, அமைதியான வாழ்க்கையையும், அடிப்படை கட்டமைப்பையும் மட்டுமே, அந்த வகையில் சாலைகள் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக மட்டுமே உள்ளது. சாலைகள் படு மோசமாக உள்ளது. ஒரு பெண் தன்னந்தனியாக சாலையில் சென்று வீடு திரும்ப வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கிய அரசு அதிமுக மட்டுமே .
இன்றைக்கு சவுக்கு சங்கர் வீட்டில் நடைபெற்ற சம்பவத்தால், இந்த அரசு மலத்தை வைத்து கூட மலிவான அரசியல் செய்து கொண்டிருக்கிறது. சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து கச்சத்தீவு தாரை வார்த்தது திமுக அரசு. அதன் விளைவாகத்தான் இன்று மீனவர்கள் கொல்லப்படுவதும் சுடப்படுவதும் கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
மத்திய அரசு மறு சீரமைப்பு குறித்து எதுவும் சொல்லாத போது அமித் ஷா சொன்னதை வைத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் ஸ்டாலின். அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானத்தைக் கூட உருப்படியாக எழுதவில்லை. அதைக்கூட அதிமுக சார்பில் பங்கேற்றவர்கள் திருத்திக் கொடுத்தனர்.
விலைவாசி ஏற்றம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா விற்பனை உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இந்த மறு சீரமைப்பு. தொகுதி மறுசீரமைப்புக்கு, முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவையெல்லாம் 2029 தான் முடியும்.
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு அடகு வைத்தது திமுக. விலை உயர்வுகள் மூலம் மக்களிடமிருந்து மாதத்திற்கு சுமார் ரூ.25,000 எடுத்துக் கொண்டு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. டாஸ்மாக்கில் மட்டுமே 52 ஆயிரம் கோடியாக வருமானம் அதிகரித்துள்ளது. வரி வசூல் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசு உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாத வெங்காய அரசாங்கமாகத்தான் உள்ளது. இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தை மீண்டும் நிலை நிறுத்த 2026 இல் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். என்று பேசினார்.