புதுடெல்லி: காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருவதற்கு முன்பு தனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
ராய்பூர் மற்றும் பிலாயில் உள்ள பூபேஷ் பாகலின் வீடுகளிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரியின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்றாலும் சிபிஐ தரப்பில் இந்தச் சோதனை குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி தொடர்பாக இந்தச் சோதனை நடந்ததாக தகவல் அறிந்ததாகத் தெரிவித்தனர்.
இந்தச் சோதனை குறித்து பூபேஷின் அலுவகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “தற்போது சிபிஐ சோதனைக்காக வந்திருக்கிறது. ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் (குஜராத்) நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் கூட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள வரைவுக் குழுவின் கூட்டத்துக்காக இன்று டெல்லி செல்ல உள்ளார். அதற்கு முன்பாக சிபிஐ ராய்பூர் மற்றும் பிலாய் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூபேஷின் வீட்டைத் தவிர ராய்பூர் மற்றும் துர்க் மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடந்ததாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக மகாதேவ் பந்தய செயலி ஊழல் தொடர்பாக பல்வேறு காவல்நிலையங்களில் பதியப்பட்டுள்ள 70 வழக்குகள் மற்றும் மாநில பொருளாதார குற்றப்பிரிவினர் பதிவுசெய்ய ஒரு வழக்கு என அனைத்தையும் கடந்த ஆண்டு மாநில அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.
அதேபோல், சமீபத்தில் மதுபான ஊழல் வழக்குத் தொடர்பாக பூபேஷ் வீட்டில் அமலாக்கதத் துறை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.