சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 26) டெல்லி புறப்பட்டுச் சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட்டார். நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், “2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது. அதில், முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகளை மட்டுமே பேசினோம். கூட்டணி பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி எல்லாம் தேர்தல் நெருக்கத்தில் பேசப்படும்” என்று கூறினார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். வியாழக்கிழமை அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் நிலவரம், அதிமுக கூட்டணி தொடர்பான தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய தலைமை அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, நேற்றைய அதிமுக சந்திப்பின்போதே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது குறித்தும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால், அவர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்து தேசிய தலைமை அறிய விரும்புவதால் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.