குன்றத்தூர்: திமுக இளைஞர், மாணவர் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று குன்றத்தூரில் நடைபெற்றது. குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி கிளை நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் சிக்கராயபுரத்தில் ஒன்றிய செயலாளர் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் சபாபதிமோகன், தி.மு.க மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் இரா.இராஜீவ்காந்தி, தி.மு.க செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று திராவிட இயக்க நூற்றாண்டு வரலாறு, மாநில சுயாட்சி, தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றி விரிவாகப் பேசினர், மேலும், “திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான். சமூக நீதி, மொழி உணர்வு, அனைவருக்கும் சமமான கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் முதல்வர் சிறப்பான முறையில் கவனம் செலுத்தி ஆட்சி நடத்தி வருகிறார்.
50 ஆண்டுகால உழைப்பு: இளைஞர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் 50 ஆண்டுகால கடினமான உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த முதல்வர் பதவி. முதல்வரின் காலை உணவு திட்டம், இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமைந்துள்ளது” என்றனர்.
இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் கே.ஜி.பாஸ்கர்சுந்தரம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எல்.பிரபு, ஒன்றியக் குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ. வந்தே மாதரம், ஒன்றிய இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் ப.அறிவொளி, அ.ஜமீர் மற்றும் கிளைக்கழக இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள் என 1,600 இளைஞர் அணியினர் பங்கேற்று சிறப்பித்தனர்.