தேர்தலுக்கு முன்பு தே.ஜ. கூட்டணி வலுப்பெறும்: டிடிவி தினகரன் உறுதி

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, அந்த கூட்டணி வலுவாகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இஃப்தார் நோன்பை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைமை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். நிகழ்வில் டிடிவி தினகரன் பேசியதாவது:

தேர்தலின் போது இஸ்லாமியர்களை அரவணைப்பதும், தேர்தல் முடிந்தபின் அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதுமே திமுகவின் குணம். திமுக ஆட்சியில் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை மறைக்க மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என தேவையற்ற பிரச்சினைகளை திமுக ஊதி பெரிதாக்கி கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு வரும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் நல்ல முடிவுரை எழுதுவார்கள். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிற அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலுக்கு முன்பாகவே உறுதியாக இடம்பெற்று, அந்த கூட்டணி வலுப்பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் நிறுவப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “ புனித ரமலான் மாதத்தில் ஆண்டவரிடம் நாம் எதை வேண்டுகிறோமோ, அது நிச்சயமாக நடக்கும். அந்தவகையில் தமிழகத்தில் மீண்டும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்றால், பிரிந்து கிடக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இந்த ரமலான் மாதத்தில் என்னுடைய வேண்டுதலாகும்.” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன், பாமக செய்திதொடர்பாளர் கே.பாலு, தமாகா பொதுச்செயலாளர் முனைவர் பாஷா, தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.