சென்னை: கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம் வழித்தடம், தாம்பரம் – கிண்டி வழித்தடம் ஆகிய இரண்டு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
சென்னையில் ஏற்கெனவே இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரையில் 15.46 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையில் 21.76 கி.மீ. செயல்படுத்தப்படும் திட்டத்துக்கும், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையில் 27.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்நிலையில், கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வழியாக உயர் நீதிமன்றம் வரையிலான 6 கி.மீ. தொலைவுக்கும், தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலான 21 கி.மீ. தொலைவுக்கும் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்காக, திட்ட அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம் வழித்தடம், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கமாக அமைய உள்ளது. இதன்மூலமாக, ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.