டெல்லியில் உள்ள திகார் சிறை புற நகருக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சர்வே பணிகளுக்கு டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள பாஜக அரசு, தனது முதல் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தது. நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரேகா குப்தா, இதனை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: இது ஒரு சாதாரண பட்ஜெட் அல்ல, வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்த டெல்லியை மேம்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையே இந்த பட்ஜெட். இதில் உள்கட்டமைப்பு மேம்பாடு, மின்சாரம், சாலைகள், தண்ணீர் என 10 துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் கோடியிலான இந்த பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டை விட 31.5% அதிகமாகும். ஊழல் மற்றும் திறமையின்மையின் காலம் முடிந்துவிட்டது. பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக, ரூ.28,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் ஜன் ஆரோக்கிய திட்டத்துக்கு ரூ.2,144 கோடியும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் திட்டத்துக்கு ரூ.5,100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதி இணைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1,000 கோடியும் சாலைகள் மற்றும் பாலங்கள் உள்கட்டமைப்புக்காக ரூ.3,843 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். ரூ.100 கோடியில் டெல்லி முழுவதும் 100 அடல் உணவகங்கள் ஏற்படுத்தப்படும். திகார் சிறைச்சாலை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சர்வே மற்றும் ஆலோசனை சேவைக்காக பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ரேகா குப்தா கூறினார்.
டெல்லியில் ரூ.1958-ல் ஏற்படுத்தப்பட்ட திகார் சிறை இந்தியாவின் மிகப் பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக உள்ளது. 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. ரேகா குப்தா தனது உரையில், முந்தைய ஆம் ஆத்மி அரசை விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “முந்தைய அரசுக்கும் எங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் நாங்கள்தான் அவற்றை நிறைவேற்றப் போகிறோம். பிற மாநில அரசுகளை அவர்கள் வசை பாடினர். நாங்கள் இணைந்து செயல்பட உள்ளோம். அவர்கள் ஆடம்பர சீஷ் மகால்களை கட்டினர். நாங்கள் ஏழைகளுக்கு வீடுகளை கட்ட உள்ளோம். டெல்லியை லண்டன் போல் மாற்றப் போவதாக கூறினர். ஆனால் போக்குவரத்து நெரிசல், முற்றுப் பெறாத திட்டங்களையே விட்டுச் சென்றுள்ளனர்” என்றார்.