`மனிதாபிமானமற்ற அணுகுமுறை…' – அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில், “மார்பகத்தைப் பிடிப்பதையோ… அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதையோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் அத்துமீறலாக/ தாக்குதலாகத்தான் கருத முடியும்.” என்ற அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்தை `கொஞ்சம்கூட உணர்திறன் இல்லாதது’ எனச் சாடியுள்ளது உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் பி.ஆர்.காவாய் மற்றும் அகஸ்ட்டின் ஜார்ஜ் மாஸிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்களால் மன வேதனை அடைந்ததாகத் தெரிவித்தது. மேலும் உத்தரப்பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் அகஸ்ட்டின் ஜார்ஜ் மாஸிஹ்

“தீர்ப்பை எழுதியவர் தரப்பில் கொஞ்சமும் உணர்திறன் இல்லை என்பதைக் கூறுவதில் வேதனை அடைகிறோம். இது உடனடி தூண்டுதலால் வழங்கப்படட தீர்ப்பு அல்ல. தீர்ப்பை முன்பதிவு செய்து 4 மாதங்களுக்குப் பிறகே வழங்கியிருக்கின்றனர். அதாவது அவர்களது மனதைப் பயன்படுத்தியே இதை எழுதியிருக்கின்றனர்.

பொதுவாக ஒரு தீர்ப்புக்கு இந்தக் கட்டத்தில் தடை வழங்க நாங்கள் தயங்குவதுண்டு. ஆனால் பத்திகள் 21, 24 மற்றும் 26 இல் உள்ள அவதானிப்புகள் சட்டத்துக்கு மாறாகவும் மனிதாபிமானமற்ற அணுகுமுறையுடன் இருப்பதனாலும் அந்த பத்திகளில் உள்ள அவதானிப்புகளை நிறுத்தி வைக்கிறோம்.” என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

சொல்லிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகளின் தீர்ப்பை ஒப்புக்கொள்வதாகக் கூறினார். “சில தீர்ப்புகளை ஒத்திவைப்பதற்கு அவற்றில் காரணங்கள் இருப்பதுண்டு” எனக் கூறினார். அதற்கு நீதிபதி கவாய், “இது மிகவும் தீவிரமான பிரச்னை. நீதிபதி தரப்பில் முழுமையான உணர்வின்மை (Insensitiveness) நிலவுகிறது.” என பதிலளித்தார்.

supreme court

அலஹாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல தரப்பில் இருந்து விவாதங்கள் எழுந்தன. We the Women of India அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக ஏற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கும் இதனுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தீர்ப்பின் பின்னணி என்ன?

கடந்த மார்ச் 17ம் தேதி அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, கீழமை நீதிமன்றத்தால் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376-ன் கீழ் (பாலியல் வன்கொடுமை தொடர்புடைய பிரிவு) சம்மன் அனுப்பப்பட்ட குற்றவாளிகள் (பவன் மற்றும் ஆகாஷ்) செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தார்.

அவர், “குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கின் உண்மைகளை பார்க்கும் போது, இது பாலியல் வன்கொடுமையோ, அல்லது அதன் முயற்சிக்கான குற்றமாக தெரியவில்லை. இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவேண்டியது அவசியம்.

Sexual Abuse (Representational Image)

மார்பகத்தை பிடிப்பதோ அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் அத்துமீறலாக/ தாக்குதலாக தான்கருத முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை செய்வதில் உறுதியாக இருந்ததாக பதிவு செய்யப்பட்ட எந்த ஆதாரமும் உறுதிபடுத்தவில்லை.

ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், பாதிக்கப்பட்டவரை மதகுக்கு அடியில் இழுத்துச் செல்ல முயன்று, அவரது பைஜாமியின் கயிற்றை அவிழ்த்தது ஆகும். குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த செயலால் பாதிக்கப்பட்டவர் நிர்வாணமாகிவிட்டார் அல்லது ஆடைகளை அவிழ்த்துவிட்டார் என்று சாட்சிகளால் கூறப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” எனத் தீர்ப்பளித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.