இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) காலமானார். இதய பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் சூரி மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசியிருக்கிறார். “மனோஜிடம் நான் அடிக்கடி பேசுவேன். ‘விருமன்’ படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்.

படப்பிடிப்பின்போது கேரவனுக்கு வந்து என்னிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டு இருப்பார். எனக்கு ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் என்று சொன்னார். திருச்சியில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு உன்னை சந்திக்கிறேன் என்றார்.
அவரின் மனைவி, குழந்தைகள், அப்பாவிற்கு இறைவன்தான் ஆறுதலாக இருக்க வேண்டும். பாரதிராஜா அப்பாவிற்கு இப்படி ஒரு சூழல் வந்திருக்கவேகூடாது இறைவன்தான் அவருக்கு ஆறுதலாக இருக்கவேண்டும்” என்று பேசியிருக்கிறார்.