புதுடெல்லி: இப்தார் விருந்தில் சமாஜ்வாதி எம்எல்ஏவான ரவிதாஸ், மெஹ்ரோத்ரா முஸ்லிம்களுடன் இணைந்து தொழுகை நடத்தினார். தலைநகர் லக்னோவில் நிகழ்ந்த இந்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநில அரசியலில் சர்ச்சையாகி உள்ளது.
தலைநகரான லக்னோவின் மால் ரோடு அவென்யூவில் தாதா மியான் எனும் தர்கா உள்ளது. முஸ்லிம்கள் இடையே பிரபலமான தர்காவில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் மத்திய லக்னோ தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவான ரவிதாஸ் மெஹ்ரோத்ராவும் கலந்து கொண்டார். இப்தாருக்கு பின் முஸ்லிம் அல்லாதவர்கள் செய்வது போல் அவர் விருந்துடன் நிற்கவில்லை.
மாறாக, முஸ்லிம்களுடன் ஒரே வரிசையில் நின்று தலையில் குல்லாவுடன் தொழுகையையும் முடித்தார். இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.
இந்நிலையில், சமாஜ்வாதியின் இந்த தொழுகையை உ.பி பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக எம்எல்ஏ ஷலாப் மாணி திரிபாதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில் தியோரியா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான ஷலாப் மாணி கூறுகையில், ‘இவர் போன்றவர்கள் தலையில் தொப்பி அணிந்தும், இப்தாரியை உண்டும், தொழுகை நடத்தியமும் சமூகத்துக்கு கேடு விளைவிக்கிறார்கள்.
தம் ஆட்சியில் தலைமையில் தொப்பிகளை அணிந்து கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள். இந்துவாக இருந்துகொண்டு தொழுகையில் ஈடுபடுவது என்பது தம் மதத்துக்கு செய்யும் மோசடியாகும்.
இதுபோன்றவர்களால் எப்படி இஸ்லாமியர்களுக்கு நெருக்கமாக முடியும்? சமாஜ்வாதி கட்சியினரின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வாக்கு அரசியலுக்கானது’ எனத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிதாஸின் இந்த நடவடிக்கை மதநல்லிணக்கத்தைக் காட்டுவதாக முஸ்லிம்கள் பாராட்டினர். உ.பியில் நிலவும் கங்கை யமுனை கலப்பை போலான இருமதங்களின் கலப்பு இது என சமாஜ்வாதியினர் பெருமிதம் கொள்கின்றனர்.