புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதை பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு முஸ்லிம்களுக்கு வழங்குகிறது.
உத்தரப்பிரதேச சிறுபான்மை பிரிவு, இந்த ஆண்டு ஈத் பண்டிகையில் ஒரு நற்பணியை செய்கிறது. இதில், உ.பியின் 32 லட்சம் ஏழை முஸ்லிம்களுக்கு ‘சவுகேத்-எ-மோடி’ என்ற பெயரில் ஒரு பரிசுத் தொகுப்பை இலவசமாக விநியோகிக்கிறது. இந்த இலவசத் தொகுப்பில் ரம்ஜான் இனிப்பு செய்வதற்கான சேமியா பாக்கெட், சர்க்கரை, உலர் பழங்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பாஜகவின் உ.பி சிறுபான்மை பிரிவின் தலைவர் குன்வர் பாசித் அலி கூறியதாவது: இந்த பரிசுத் தொகுப்பை ஏழைகளும் பொதுமக்களுடன் இணைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாட அளிக்கிறோம்.
இதில் பண்டிகை கொண்டாட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. இவை உ.பியின் 32,000 மசூதிகளின் மூலமாக விநியோகிக்க பெயர் பட்டியலை கேட்டுள்ளோம். ஒவ்வொரு மசூதிக்கும் 100 தொகுப்புகள் அனுப்பி வைக்கப்படும்.
‘சப் கே சாத் சப்கா விகாஸ்’ (அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி)’ எனும் நம் பிரதமரின் கொள்கைக்கு உதாரணமாக இந்த செயல் அமைகிறது. இந்த முயற்சியும் அதே திசையில் ஒரு படியாகும் எனத் தெரிவித்தார்.
பாஜகவின் இந்த முயற்சியை உ.பியின் முக்கிய முஸ்லிம் மவுலானாவான ஷஹாபுத்தீன் ரிஜ்வீ வரவேற்றுள்ளார். 2014-ல் மோடி பிரதமராகப் பதவி ஏற்றது முதல் அவர் முஸ்லிம்களுடன் நட்பு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பரேல்வி முஸ்லிம்களின் சமூக செயற்பாட்டாளரான மவுலானா சஹாபுத்தீன் கூறும்போது, ‘மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் தீய சக்திகளுக்கு மோடியின் பெயரிலான இந்த ரம்ஜானின் தொகுப்பு சரியான பதிலடி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சிறுபான்மை பிரிவின் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை எதிர்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன. இதன் மீது உ.பியின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியும் பாஜகவை சாடியுள்ளார்.
இது குறித்து மாயாவதி கூறும்போது, ‘இது பாஜகவின் அரசியல் சுயநலம். உ.பியில் முஸ்லிம்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியினரும் தம் மதப் பாதுகாப்பில் அச்சமுற்றுள்ளனர். பைஸாகி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஈஸ்டர் போன்றவைகளில் மட்டும் பாஜகவிற்கு சிறுபான்மையினர் நினைவு எழும். இந்த நிலையில், பாஜகவின் ரம்ஜான் தொகுப்பால் என்ன பலன்? எனக் குறிப்பிட்டுள்ளார்.