ப்ரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ̀எல்: எம்புரான்’ திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இந்த மாலிவுட் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் மாலிவுட்டில் உருவாகியிருக்கிற பெரிய பட்ஜெட் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. ̀̀இத்திரைப்படம் நன்றாக ஓடினால்தான் இப்படியான திரைப்படங்கள் தொடர்ந்து வரும்” என படத்தின் புரோமோஷன் சமயங்களில் இயக்குநர் ப்ரித்விராஜ் கூறியிருந்தார். 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்த ̀எல்2: எம்புரான்’ படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தை தொடங்கும்போதே மூன்று பாகங்களாக எடுக்கதான் திட்டமிட்டிருக்கிறார்கள். கதாசிரியர் முரளி கோபி இப்படத்தின் கதையை ̀டியான்’ படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ப்ரித்விராஜிடன் கூறியிருக்கிறார். இக்கதை ப்ரித்விராஜுக்கு பிடித்ததும் இப்படத்தில் இயக்குநராக களமிறங்க திட்டமிட்டிருக்கிறார். சரி, எம்புரான் உலகத்தை காண்பதற்கு முன் ̀லூசிஃபர்’ படத்தின் கதைக்கு ஒரு விசிட் அடிப்போமா…
கேரளா மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது ̀ஐ.யூ.எஃப்’. இக்கட்சியின் தலைவர் பி.கே.ஆர் உடல்நலம் சரியில்லாமல் காலமாகிறார். எதிர்கட்சித் தலைவருடைய மகளின் மருத்துவமனையில் பி.கே.ஆர் இறந்துவிடுவதால் அதனை பூதாகரமான பிரச்னையாகவும் ஆளுங்கட்சியினர் மாற்றுகின்றனர். இந்த ஆளுங்கட்சிக்கு குரேஷி ஆப்ரகாம் என்பரிடமிருந்து ஃபண்டிங் வருகிறது. பி.கே.ஆருக்கு ப்ரியா (மஞ்சு வாரியர்) என்ற மகளும், ஜத்தின் (டொவினோ தாமஸ்) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரைத் தாண்டி ஸ்டீபன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார் பி.கே.ஆர். அதுமட்டுமல்ல, மக்களின் அன்பும் ஸ்டீபனுக்கு இருக்கிறது.

ப்ரியாவின் முதல் கணவர் ஒரு விபத்தில் முன்பே உயிரிழந்துவிட்டதாக படத்தில் காட்சிபடுத்தியிருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும் இருக்கிறார். ஆனால், அவர் போதை பழகத்திற்கு அடிமையானவராக இருக்கிறார். ப்ரியாவின் இரண்டாவது கணவரான பாபி (விவேக் ஓப்ராய்) ப்ரியாவின் மகளிடம் தவறான முறையில் நடந்துக் கொள்கிறார்.
இந்த விஷயம் தாமதமாகதான் ப்ரியாவுக்கு தெரிய வருகிறது. டிரக் டீலரிடமிருந்து கட்சிக்கு பணம் வருவதற்கு பாபி திட்டமிடுகிறார். பாபியின் இந்த கோர முகம் ப்ரியாவுக்கு தாமதமாகதான் தெரிய வருகிறது. தொடக்கத்தில் ப்ரியாவுக்கு ஸ்டீபனை பிடிக்காது. அவரை எதிர்க்கவே செய்வார். மூன்றாவது மகன் ஜத்தின் வெளிநாட்டில் இருக்கிறார். பி.கே.ஆரின் மறைவுக்குப் பிறகு அவரை கட்சியிந் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிடுகிறார்கள். பிறகு சில திட்டங்களை திட்டி ஸ்டீபனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள்.

ஜெயிலிலிருந்தாலும் தனது கூலிபடை சையத் மசூத் (ப்ரித்விராஜ்) மூலம் கேரள மாநிலத்திற்கு போதைப் பொருள் கடத்த நினைக்கும் பாபியின் திட்டத்தைச் சிதைக்கிறார் ஸ்டீபன். பிறகு ஜெயிலிலிருந்து வெளியே வரும் ஸ்டீபனை சந்தித்துப் பேசுகிறார் ப்ரியா.
ஸ்டீபனும் ப்ரியாவுன் நெருக்கடியான சூழலுக்கு உதவுகிறார். பெரிய டிரக் டீலர் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் பாபிக்கு கட்சியில் அதன் பிறகு பலம் இல்லாமல் போகிறது. அவர்களிடம் சிக்கும் பாபியை பிறகு ஸ்டீபன் கொலைச் செய்கிறார். இதனை தொடர்ந்து ஜத்தினும் கேரளா மாநிலத்தின் முதல்வராகிறார். பாபிக்கு விஸ்வாசமாக இருந்து ஸ்டீபனுக்கு துரோகம் இழைத்தவர்களை ஸ்டீபனின் விஸ்வாசிகள் கையும் களவுமாக பிடித்துக் கொலை செய்கிறார்கள். அதன் பிறகு க்ளைமேக்ஸின் இறுதிக்காட்சியில் ஸ்டீபனுக்கு உதவும் சையத் மசூத் முன் ஒரு ஹெலிகாப்டர் வந்து நிற்கிறது.

அதிலிருந்து கட்சிக்கு ஃபண்டிங் கொடுக்கும் ஆப்ரகாம் குரேஷி வந்து இறங்குகிறார். அந்த ஆப்ரகாம் குரேஷி வேறு யாரும் இல்லை, பி.கே.ஆரின் பாசத்திற்குரிய ஸ்டீபன்தான்! அதாவது ஸ்டீபனாக அதிரடியாக காட்டிய நம் லாலேட்டன்தான் இந்த குரேஷி அப்ரகாம். இவரைப் பற்றியக் கதைதான் இந்த இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.