பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.
மேலும், அண்ணாமலையின் மீதான புகாரையும் அமித் ஷாவிடம், பழனிசாமி முன் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் காரணமாக, 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை இன்று காலை டெல்லி செல்ல இருப்பதாகவும், அங்கு அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது, மாநில தலைவர் பதவி, பழனிசாமி முன்வைத்த புகார், கூட்டணி குறித்து அண்ணாமலையுடன் அமித் ஷா ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று வந்து ஒரு நாள் கழித்து, அண்ணாமலை டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.