புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த உரிமை மீறல் நோட்டீஸ் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரால் நிராகரிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பிரதமரின் தேசிய நிவாரண நிதி நிர்வாகத்தில் காங்கிரஸ் தலைவர் சேர்க்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸை தாக்கல் செய்தார்.
அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் உண்மையற்ற தகவலை அமித் ஷா கூறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் குறித்து இன்று பேசிய ஜக்தீப் தன்கர், “தான் பேசியதற்கான ஆதாரத்தை அமித் ஷா அளித்திருக்கிறார். 1948ம் ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிரதமரின் தேசிய நிவாரண நிதி நிர்வாகத்தில் பிரதமர், காங்கிரஸ் தலைவர், வேறு சிலர் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி அறிக்கை மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு முகமை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நான் அதை கவனமாகப் பரிசோதித்தேன். எந்த மீறலும் நடக்கவில்லை என்று நான் காண்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த அடிப்படையில் உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் சிலர், அதில் கூறப்படும் ஆண்டு 1948, தற்போது 2025 என்று கூறி கோஷமிட்டனர்.