‘கறுப்பு நிறம் இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் உண்மை. கறுப்பு நிறம் அழகானது. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளக் கூடியது’ என தன் மீதன நிற பேத விமர்சனங்களுக்கு கேரள தலைமைச் செயலர் பதிலடி கொடுத்துள்ளார்.
கேரள மாநிலத் தலைமைச் செயலாளராக இருப்பவர் சாரதா முரளிதரன். கேரள அரசின் திட்டமிடல் துறை கூடுதல் செயலராக இருந்த அவர், தனது கணவர் டாக்டர் வி.வேணு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார்.
கணவனைத் தொடர்ந்து மனைவியும் கேரள மாநிலத் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றது ஊடக கவனம் பெற்றது. அவருக்கு வாழ்த்துகளும் குவிந்தன.
அவர் தலைமச் செயலராகப் பதவியேற்று சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கேரள தலைமைச் செயலாளரான சாரதா முரளிதரன் மீண்டும் ஊடக கவனத்துக்கு வந்துள்ளார்.
ஆனால் இந்த முறை அவர் வெகுண்டெழுந்து சமூகத்துக்கு தன் கருத்துகளால் சாட்டையடி கொடுத்துள்ளார். அதுவும் முற்போக்கு சமூகம் என அறியப்படும் கேரளச் சமூகத்தில் நிலவும் நிற பேதத்தின் மீது அவர் தனது சாட்டையை சுழற்றியுள்ளார்.
பதிவும், நீக்கமும், பின்னர் நீண்ட விளக்கமும்.. முன்னதாக செவ்வாய்க்கிழமை அவர் தனது முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், தனது கறுப்பு நிறம் பற்றி எழுந்த விமர்சனத்தை சுட்டிக் காட்டியிருந்தார். அதில் அவர், “நான் எவ்வளவு கறுப்போ, எனது கணவர் அத்தனை வெள்ளை. எனது பணியும் அப்படி கருப்பானதுதான். என்று என்னையும் எனது கணவரையும் ஒப்பிட்டு ஒருவர் விமர்சிப்பதை நான் கேட்டேன்.” என்று பதிவிட்டிருந்தார். ஆனால், அந்தப் பதிவை சில மணி நேரத்தில் நீக்கினார் சாரதா முரளிதரன்.
பின்னர் நேற்று இரவு நீக்கப்பட்ட பதிவு தொடர்பாக நீண்ட விளக்கத்துடன் ஓர் ஆழமான பதிவை சாரதா முரளிதரன் பகிர்ந்தார். அதில், அவர் கூறியுள்ளதாவது: நான் கறுப்பு. என் கணவர் வெள்ளை. நான் எவ்வளவு கறுப்போ அதே அளவு தலைமைச் செயலராக எனது திறமையும் கறுப்பு என்ற ரீதியில் ஒருவர் விமர்சித்திருந்தார். அது என்னை பாதித்தது. அதைப் பற்றி நான் முகநூலில் முதலில் பதிவிட்டேன். அதன் பின்னூட்டங்களால் வருந்தி அதை நான் நீக்கினேன். ஆனால், எனது நலம் விரும்பிகள் என்னை அது பற்றி எழுதத் தூண்டினார்கள்.
நான் எனது கறுப்பு நிறுத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதன் மீது உரிமை கொள்கிறேன். கடந்த 7 மாதங்களாகவே தலைமைச் செயலர் பதவியில் எனது செயல்பாட்டையும் எனக்கு முன்பு அந்தப் பதிவியில் இருந்த எனது கணவரின் செயல்பாட்டையும் எனது நிறத்தைச் சொல்லியே ஒப்பிட்டுப் பேசுகின்றனர். ஆம் நான் அதில் காயமடைந்துள்ளேன். ஆனால் அது என்னை கறுப்பு என்று சொன்னதற்காக அல்ல. கறுப்பு நிறத்தின் தொடர்பு படுத்தப்படும் இழிவான மனநிலை மீதானது. கறுப்பு நிறம் என்றால் அது நல்லதல்ல, அது தீமையானது, அது தவறானது, அது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிடுகின்றனர்.
கறுப்பு என்பது ஒரு நிறம். அது அழகானது. இந்த பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் உண்மை அது. கறுப்பு நிறம் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளக் கூடியது. மனிதகுலம் அறிந்த ஆற்றல்.
கறுப்பு நிறம் எல்லோருக்கும் பொருந்தும் ஆடை நிறம். அலுவலகமாக இருக்கட்டும் மாலை நேர விசேஷமாக இருக்கட்டும். கறுப்பு மிடுக்கேற்ற்றும். கார்மேகத்திலிருந்து கறுமை தானே. ஆனால், ஏன் கறுப்பானவர்களை அவமதிக்க வேண்டும். கறுப்பு நிறத்தை எதற்காக இவ்வளவு மோசமாகப் பார்க்க வேண்டும்.
நான் 4 வயதாக இருக்கும்போது எனது அன்னையிடம் மன்றாடியிருக்கிறேன். என்னை மீண்டும் கருவுக்குள் கொண்டு வெள்ளையாக பிரசவிக்க வேண்டுவதாகக் கூறியுள்ளேன். கறுப்பு மோசமான நிறம் என்ற சிந்தனை என் மீது சுமத்தப்பட்டது. அந்தச் சுமையோடுதான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வாழ்கிறேன்.
கறுமையின் அழகை அடையாளம் கண்டுகொள்ளாத வகையில், வெள்ளை தோலால் ஈர்க்கப்பட்டு , ஈர்க்கப்படுவது போன்ற நிலையில் வாழ்வதற்கு நான் நிர்பந்திக்கப் பட்டேன். ஆனால், கறுப்பில் நான் கண்டுபிடிக்காத அழகை என் குழந்தைகள் கண்டார்கள். கறுப்பு அழகானது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள். கறுப்பு அழகானது என்பது இப்போது எனக்குப் புரிகிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.
சபாஷ் சொன்ன எதிர்க்கட்சித் தலைவர்: அவரது இந்தக் கருத்தை வரவேற்றுள்ள கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஷன் பகிர்ந்துள்ள பதிவில், “அன்புள்ள சாரதா முரளீதரனுக்கு சல்யூட். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் எனது மனதைத் தொடுகிறது. இது விவாதிக்கப்பட வேண்டியது. எனது தாயாரும் கூட கறுப்பு நிறத் தோற்றம் கொண்டவரே.” எனப் பதிவிட்டுள்ளார்.