அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.
இந்த சீசனில் தற்போது வரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதிலாக பேட்டிங் என்று சொல்லலாம் என தென் ஆப்பிரிக்கா அணியின் வீரரும், குஜராத் அணியின் வீரருமான ரபாடா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக உள்ளது. போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று சொல்லுங்கள்.
அது தான் சரியாக இருக்கும். சில சாதனைகள் முறியடிக்கப்படுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், பேட்டிங் மற்றும் பந்துக்கு இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.