கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை – நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்விநேரத்தின்போது அணுமின் நிலையங்கள் தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு எம்.பி. துணைக்கேள்வி கேட்டார். அதில், “தொழில்நுட்பத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் முன்னேறிய அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகளில் உள்ள அணுஉலைகள் விபத்துகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணுஉலைகளின் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பாக மத்திய அரசு தெளிவான கொள்கையை கொண்டு வரவில்லை. அது பற்றி தெரிவிக்க முடியுமா?” என கேட்டார்.

இதற்கு, அணுசக்தி, அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு உலைகளில் அனைத்துவிதமான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. கூடங்குளம் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை என ஆய்வில் தெரிய வந்தது.

பிற இடங்களில் இருந்து அணுஉலை கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து சேமிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அப்படி அல்ல. அந்தந்த நிலையங்களிலேயே கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. அது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து அகற்றப்படுகிறது. அணு உலைகளில் இருந்து தூரமான இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு 15 மீட்டர் ஆழத்தில் வைக்கப்படும். பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து அகற்றப்படும். இதே செயல்முறையைத்தான் உலக நாடுகள் பின்பற்றுகின்றன.

எனவே, கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ பிற இடங்களின் கழிவுகள் சேமிக்கப்படவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 0.081 என்ற நிலையில் இருந்து 0.002 ஆக குறைந்து உள்ளது. கல்பாக்கத்தில் 2014-ல் 23.140 ஆக இருந்தது. தற்போது அது 15.960 ஆக குறைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.