தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மூத்த திரை எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறது. சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருத்த காரைக்குடி நாராயணனை சமீபத்தில் கௌரவித்தனர். அந்த வகையில் அடுத்து பாடலாசிரியர் முத்துலிங்கத்தை கௌரவிக்கின்றனர்.
திரையுலகில் 50 ஆண்டுகளை கொண்டாடி வருகிறார் முத்துலிங்கம். ‘முத்துக்கு முத்தான விழா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த விழா வருகிற 29-ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை நாரதகான சபாவில் நடைபெறுகிறது.
தமிழ்த் திரையுலகின் ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். பெப்சியின் கீழ் இயங்கும் இச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜை செயல்பட்டு வருகிறார். துணைத் தலைவர்களாக ‘யார்’ கண்ணனும், ரவிமரியாவும் உள்ளனர்.
செயலாளராக லியாகத் அலிகானும், பொருளாளராக பாலசேகரனும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிர இயக்குநர்கள் சரண், பேரரசு, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், அஜயன்பாலா, சாய்ரமணி, வி.பிரபாகர், பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், , ஹேமமாலினி என பலரும் பொறுப்புகளில் உள்ளனர்.

கடந்த 1973 ஆண்டில் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் முத்துலிங்கம். ‘தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா.. ‘ என்ற பாடல் இப்போதும் கிராமத்து மணம் கமழும்.
எம்.ஜி.ஆரின் ‘ஊருக்கு உழைப்பவன்’, ‘மீனவ நண்பன்’, ‘உழைக்கும் கரங்கள்’ என பல படங்களில் இவரது பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்பட்டது. ”மாஞ்சோலை கிளிதானோ’, ‘இதயம் போகுதே’, ‘பொன்மானை தேடி’ என முத்துலிங்கத்தின் பாடல்கள் தேனமுது வரிசையில் அடங்கும். 47 இசையமைப்பாளர்கள், 1500 பாடல்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்.
வரும் 29ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் எஸ்.பி.முத்துராமன், கங்கை அமரன், மேத்தா, பழனி பாரதி, சங்கர் கணேஷ், எஸ்.தாணு, பி.வாசு, விக்ரமன் என பலரும் முத்துலிங்கத்தை வாழ்த்திப் பேசுகிறார்கள். விழாவிற்கு கே.பாக்யராஜ் தலைமையும், திரைப்பட சங்கங்களை சேர்ந்த தலைவர்களும் முன்னிலையும் வகிக்கின்றனர். விழாவில் முத்துலிங்கம் பற்றிய ஆடியோ விஷுவல் ஒளிப்பரப்படுகிறது.

இதுகுறித்து முத்துலிங்கத்திடம் பேசினோம். ”ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பாடலாசிரியராக 50 வருஷம் தாண்டிடுச்சு. இந்த பயணம் குறித்து என்ன சொல்றதுனு தெரியல. பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்திருக்கேன். விழாவில் என்னுடைய நூல்களும் வெளியிடப்படுகிறது. ‘முத்துலிங்கம் திரைப்பாடல் முத்துக்கள்’ நான்காம் பதிப்பு நூலை சிவகுமார் வெளியிட சைதை துரைசாமி பெற்றுக்கொள்கிறார். இன்னொரு நூலான காற்றில் விதைத்த கருத்து – இரண்டாம் பதிப்பை நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட வி.ஐ.டி.வேந்தர் கோ.விசுவநாதன் பெற்றுக்கொள்கிறார். பாக்யராஜ் தலைமையில் பட்டி மன்றமும் நடைபெறுகிறது. ‘திரைப்பாடல்களில் மக்கள் மனதில் ஆழப்பதிபவை காதல் பாடல்களா – தத்துவ பாடல்களா’ என்ற தலைப்பிலான பட்டி மன்றமும் நடைபெற உள்ளது.” என்கிறார் முத்துலிங்கம்.