சிஎஸ்கேவை திணறடிக்க… ஆர்சிபியின் அந்த 3வது ஸ்பின்னர் யார்? DK சொன்ன ரகசியம்!

IPL 2025 CSK vs RCB: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 

CSK vs RCB: பொறுத்திருந்து பாருங்கள்… தினேஷ் கார்த்திக் பதில்

இந்நிலையில் இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். 

ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் பெங்களூரு அணிக்கு சிரமம் இருக்கத்தானே செய்கிறது?,”நாங்கள் ஒரு புதிய அணியோடு சீசனை தொடங்கியிருக்கிறோம். ஒரு போட்டியில்தான் ஆடியிருக்கிறோம். ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடுவதுதான் இந்த அணியின் பலம் என நினைக்கிறேன். போட்டிகள் செல்ல செல்ல நீங்களே அதை பார்ப்பீர்கள்.

CSK vs RCB: விராட் கோலி அதே பசி உடன் தான் இருக்கிறார்…!

சென்னை அணி மூன்று சிறந்த ஸ்பின்னர்களை வைத்திருக்கிறது. அதில் சந்தேகமில்லை. ஆனால், நாங்களும் அவர்களை எதிர்கொள்ளக்கூடிய திறனுடைய பேட்டர்களை வைத்திருக்கிறோம். ஸ்பின்னர்கள் சிறப்பாக ஆடக்கூடியவர்கள் என்பதால்தான் அவர்களை ஏலத்திலும் எடுத்திருக்கிறோம்” என்றார். 

விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக கொஞ்சம் திணறத்தானே செய்கிறார்?,”விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் மிகச்சிறப்பாகத்தான் ஆடிவிட்டு வந்திருக்கிறார். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் பார்த்திருப்பீர்கள். அவர் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாகத்தான் ஆடிவருகிறார். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் கோலிதான் இரண்டாம் இடத்தில் இருந்தார்.

துபாய் மாதிரியான ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை நன்றாக எதிர்கொள்ளாமல் அவ்வளவு ரன்களை எடுக்க முடியாது. இப்போது கூட விராட் கோலியிடம் பேசிவிட்டுதான் வருகிறேன். புதிதாக ஒரு ஷாட்டில் அதிகமாக ஒர்க் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார். கோலி இன்னமும் அதே பசியோடு இருக்கிறார். அவர் எங்கள் அணியின் சிறப்பான வீரர். முன்னெப்போதையும் விட அதிக தன்னம்பிக்கையோடு கோலி இருக்கிறார்” என்றார். 

CSK vs RCB: மூன்றாவது ஸ்பின்னர் யார்?

கோலியின் முதுகு வலி எப்படி இருக்கிறது. புவனேஷ்வர் குமார் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு,”கடந்த போட்டியில் காயம் காரணமாகத்தான் புவனேஷ்வர் ஆடவில்லை. ஆனால், நேற்று வலைப்பயிற்சியில் சிறப்பாகத்தான் வீசியிருக்கிறார். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

விராட் கோலிக்கு நாள்பட்ட முதுகுவலியே. அதோடு எப்படி ஆட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். மற்றபடி அணியில் எல்லாருமே உடற்தகுதியுடன் தான் இருக்கிறார்கள். மூன்றாவது ஸ்பின்னர் தேவைப்பட்டால் மோஹித் ரதியை பயன்படுத்துவோம்” என்றார்.

CSK vs RCB: 17 ஆண்டுகளுக்கு பிறகு வெல்வோம்…! 

சின்னசாமி மைதானத்தில் எந்த அணியாலும் சிறப்பாக ஆட முடியும் என்பதால் உங்களுக்கு வெளி மைதானங்களில் ஆடும் போட்டிகள் ரொம்பவே முக்கியம். ஆனால், பெங்களூரு அணி 2008ஆம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் வெல்லவே இல்லையே?

இதுதான் எங்களுக்கு இந்தப் போட்டியின் மீதான சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. எங்கள் அணியில் புதிதாக நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் வெற்றிக்கான தீர்க்கமும் பசியும் இருக்கிறது. 

எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை கடந்தப் போட்டியில் காட்டினோம். மைதானங்களை பற்றி யோசிக்காமல் எங்களது ஆட்டத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டே செல்ல விரும்புகிறோம். இரண்டு நல்ல அணிகள் மோதப்போகும் இந்தப் போட்டி கட்டாயம் சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார். 

CSK vs RCB: பதிரானா வருவாரா?

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். சிஎஸ்கே அணியின் நாளைய போட்டிக்கான யுக்திகள் குறித்து கேட்டபோது, “முடிவுகள் கூட்டு பேச்சுவார்த்தையின் மூலம் எடுக்கப்படும், மற்றும் எந்த வீரரை தேர்வு செய்வது என்பதைக் குறித்து இறுதி முடிவை கேப்டன்தான் எடுப்பார்” என பதில் அளித்தார். மதீஷா பதிரானா நாளை விளையாடுவாரா என்ற கேள்விக்கு, “பதிரானா தற்போது முன்னேற்றம் கண்டுவருகிறார்” என்றார்.

CSK vs RCB: சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரில் மாற்றம் வருமா?

மிடில் ஆர்டரில் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு,”நாங்கள் ஒரு போட்டி மட்டுமே விளையாடியுள்ளோம், எனவே மிடில் ஆர்டரில் மாற்றம் செய்ய எந்த வாய்ப்பும் இல்லை” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர்,”ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இரண்டும் அணிகளும் கடந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வேறுபட்டுள்ளன. கோலி அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.

அதே போல, கடந்த 12 மாதங்களில் ரச்சின் ரவீந்திராவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. நியூஸிலாந்து அணிக்கு நிறைய ரன்கள் சேர்த்துள்ளார். அவரிடம் சக்தியும், நல்ல ஒருங்கிணைப்பும் உள்ளது” என்றார்.

CSK vs RCB: ஆடுகளம் குறித்து பேசிய பிளமிங் 

நாளை விளையாடும் ஆடுகளம் குறித்து கேட்ட போது, “டெல்லி ஆடுகளம் அதிகம் ரியாக்ட் செய்யது. ஆனால் இதன் தன்மை முற்றிலும் மாறுபட்டது. ஸ்பின் முக்கியம் என்பதுடன், குறிப்பாக இங்கு நாம் பார்த்தபோது, ஒரு பிளாட் டிராக். ஆனால் இங்கு பந்து திரும்பினால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம்.

வீரர்கள் ஒரு சீசனில் இருந்து நேரடியாக வந்து விளையாடும் போது அனுபவம் இருக்கும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, முக்கிய நிலைப்பாடுகளில் பவுலர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும், அதுவே அணிக்கு தேவை” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.