இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தொடர்புடைய முக்கியமான ஆதாரங்களை முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அழித்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ ராம் கதம் குற்றம்சாட்டியுள்ளார். சுஷாந்தின் மரணம் தற்கொலைதான் என்று சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “எம்.எஸ். தோனி, தி அன்டோல்டு ஸ்டோரி” படத்தில் எம்.எஸ் தோனி கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்த் சிங்கின் தந்தை தெரிவித்தார். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக நடிகையும், சுஷாந்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த நிலையில், சுஷாந்த் சிங் மரணம் கொலை என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்காலம் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் சிபிஐ தெரிவித்தது. அத்துடன், இந்த மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது.
இந்த நிலையில், முந்தைய உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தொடர்புடைய முக்கியமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ ராம் கதம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சுஷாந்த் மற்றும் அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் ஆகியோரின் மரணம் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். இதற்கு, சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் ராம் கதம் மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தியுள்ளார்.