கவுகாத்தி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேற்று நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துருவ் ஜோரேல் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் வைபவ், ஹர்ஷித் ரானா, மோயின் அலி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக், மோயின் அலி களமிறங்கினர். மோயின் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரஹானே 18 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, அங்க்ரிஷ் ரகுவஞ்சியுடன் ஜோடி சேர்ந்த டிகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் கொல்கத்தா 17.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய குவிண்டன் டிகாக் 61 பந்துகளில் 97 ரன்களுடனும், 17 பந்துகளில் 22 ரன்கள் விளாசிய அங்க்ரிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த வெற்றி மூலம் தரவரிசையில் கொல்கத்தா 6வது இடத்தில் உள்ளது. தோல்வி மூலம் தரவரிசையில் ராஜஸ்தான் 10வது இடத்தில் உள்ளது.