சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை பிறப்பிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்.4-ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளரான விஜயராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரி ஒவ்வொரு முறையும் மனுதாரர்கள் விண்ணப்பிக்க நேரிடுவது வேதனைக்குரியது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடைபெறும் வகையில் அரசு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் உரிய அரசாணைப் பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்தக் கோரி ஏற்கெனவே சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மனுதாரர் தரப்பில், இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டால் ஒவ்வொரு முறையும் வழக்குத் தொடர வேண்டிய அவசியம் இருக்காது என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்குடன் இந்த வழக்கையும் நாளைக்கு சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவி்ட்டுள்ளார்.