தெலங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில் 6 மாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பத்ராசலம் நகரில் சூப்பர் பஜார் சென்டர் பகுதியில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்து தரை மட்டமானது.
தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 4 தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். இடிபாடுகளில் மேலும் 4 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பழைய கட்டிடத்தின் மீதே எந்தவொரு அனுமதியும் பெறாமல் 4 மாடிகள் கூடுதலாக கட்டப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கட்டிடம் ஓர் அறக்கட்டளைக்கு சொந்தமானது எனத் தெரிகிறது.
மேலும் கட்டிடத்தின் அருகிலேயே ஒரு கோயிலும் கட்டப்பட்டு வருகிறது. சுற்றிலும் வீடுகள் நிறைந்த பகுதியில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.