பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பது நியாயமல்ல என்று நாடாளுமன்ற நிலைக் குழு கண்டித்துள்ளது. மேலும், சர்வ சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) செயல்படுத்த திமுக தலைமையிலான தமிழக அரசு மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2,100 கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய கல்வித் துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.

இந்தச் சுழலில் நாடாளுமன்ற நிலைக் குழு சார்பில் இப்பிரச்சனையில் ஒரு முக்கியக் கருத்து வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் கல்வி, மகளிர், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஆகிவற்றுக்காகவும் ஒரு குழு உள்ளது. இதற்கு தலைவராக காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய் சிங் உள்ளார். இந்தக் குழுவின் சார்பில் மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் மீதான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்பட்டன. இதில், மத்திய கல்வி அமைச்சகம் தனது முடிவை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, என்இபி 2020 அல்லது பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதி எதுவும் நிலுவையில் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திக்விஜய் சிங் தலைமையிலான நிலைக் குழுவின் அறிக்கையின் விவரம்: பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத சில மாநிலங்களுக்கு சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காததை குழு கவனித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சில மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள மொத்த நிதி பெருந்தொகை. மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல், கேரளாவுக்கு ரூ.859.63 கோடி மற்றும் தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி நிலுவையில் உள்ளது.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 33 மாநிலங்கள் பிஎம்ஸ்ரீக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தியும் வருகின்றன. தேசிய அளவில் மதிப்பீடு மற்றும் பாடத்திட்டத்தில் சமமான நிலையை உருவாக்க என்இபி 2020 ஒரு முன்மாதிரியான பள்ளிகளை உருவாக்குகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணக்கமாகப் பேசி இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்க்க வேண்டும். நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.

பிஎம்ஸ்ரீ என்பது என்இபி-யின் கீழ் உருவாக்கப்பட்ட மாதிரிப் பள்ளித் திட்டம். சர்வ சிக்‌ஷா அபியான் என்பது என்இபி-யின் இலக்குகளை அடைவதற்கான திட்டம். இது மத்திய கல்வித் துறை சார்பில் நிலைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிஎம்ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்திடவில்லை. இதனால், அந்த மாநிலங்களுக்கு சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழான மானியங்களை மத்திய கல்வித் துறை நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், இந்தக் காரணம் உண்மைக்கு மாறானது அல்லது நியாயமானது அல்ல என்று குழு கருதுகிறது.

சர்வ சிக்‌ஷா அபியான், பிஎம்ஸ்ரீ ஆகிய திட்டங்களுக்கும் முந்தையது. இதன் இலக்குகளை அடைய மாநிலங்களுக்கு உதவுவதை கல்வி உரிமை சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் என்பது நாடாளுமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். இது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை ஓர் அடிப்படை உரிமையாக வழங்குகிறது.

கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மொத்த சேர்க்கை விகிதத்துடன், வலுவான கல்வி முடிவுகளைக் காட்டியுள்ளன. இது தேசிய சராசரியை விட கணிசமாக அதிகம். இருப்பினும், நிதி பற்றாக்குறை மற்றும் சர்வ சிக்‌ஷா அபியான் நிதி பரிமாற்றத்தில் தாமதங்கள் என்பது பள்ளி உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் ஆதரவில் மேலும் முன்னேற்றங்களைத் தடுத்துள்ளன.

மத்திய ஒதுக்கீடுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த மாநிலங்கள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பிஎம்ஸ்ரீ போன்ற தனித் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாததற்காக சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியை மாநிலங்களுக்கு நிறுத்தி வைப்பது நியாயமானது அல்ல.

சம்பளம், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு பராமரிப்பு உள்ளிட்டவற்றில் ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பது மத்திய அரசின் கடமை. கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள சர்வ சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க குழு பரிந்துரைத்துள்ளது என்று அந்த சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.