திருநெல்வேலி: பிரிந்து கிடக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லையில் வியாழக்கிழமை அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்று, கட்சிப் பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அதிமுகவை பெரிய இயக்கமாக உருவாக்குவதற்கு உழைத்தவர். அவரது மறைவு தென் மாவட்ட மக்களுக்கு பெரிய இழப்பாகும். 1982-ம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில், அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது.
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுதான். பிரிந்திருக்கும் அதிமுக ஒன்றிணைவது அவசியம். அதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது ஆன்மாவால் வழிபிறக்கட்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.