புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன. சமீபத்தில் நிறைவடைந்த 3-வது டபிள்யூ.பி.எல். போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வாகை சூடியது.
இந்த நிலையில் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் அளித்த பேட்டியில்,
‘பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியை இன்னும் வலுப்படுத்திய பிறகே மேலும் அணிகளை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும். அணிகளின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை. இதுவரை 3 தொடர்கள் வெற்றிகரமாக நடந்துள்ளன. போட்டியும் வியப்பூட்டும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்கள், நேரடி ஒளிபரப்பில் பார்ப்போர் எண்ணிக்கை எல்லாமே ஊக்கமூட்டுகின்றன. இந்த வளர்ச்சி தொடரும் என்று நம்புகிறோம். இது டபிள்யூ.பி.எல்.-க்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்கள் கிரிக்கெட்டுக்கும் நல்ல அறிகுறியாகும்’ என்றார்.