வெப்ப அலை எச்சரிக்கை: மாநிலங்களுக்கான மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் என்னென்ன?

புதுடெல்லி: வெப்பத் தாக்கம் மற்றும் வெப்ப அலை தொடர்பான நோய்களை நிர்வகிப்பதற்கான சுகாதார வசதிகளின் தயார் நிலையை உறுதிப்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் சில இடங்கள் அதிக வெப்ப நிலையைக் காணத் தொடங்கியுள்ளன. எனவே, குளிரூட்டும் சாதனங்களின் செயல்பாட்டுக்குத் தேவையான தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சாத்தியமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரிய பேனல்களை நிறுவலாம்.

உட்புற வெப்பத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் கட்டிகள், ஓஆர்எஸ் (ORS), அவசரகால குளிர்ச்சியை வழங்க தேவையான அனைத்து உபகரணங்கள் என சுகாதார வசதிகளின் தயார் நிலை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். வெப்பம் மற்றும் சுகாதாரம் குறித்த பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) இணையதளத்தில் கிடைக்கின்றன. அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சுகாதார தாக்கத்தைத் தடுக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க சுகாதாரத் துறைகள் இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்ப வேண்டும்.

மார்ச் 1 முதல் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள், நோயாளி அளவிலான தகவல்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் (IHIP) பதிவு செய்யப்படுகின்றன. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) உருவாக்கி, மாநிலங்களுடன் என்சிடிசி (NCDC)பகிர்ந்து கொள்ளும் தினசரி வெப்ப எச்சரிக்கைகள், அடுத்த மூன்று – நான்கு நாட்களுக்கு வெப்ப அலையின் முன்னறிவிப்புகள் உள்ளிட்டவை அனைத்து சுகாதார கட்டமைப்புகளுக்கும் உடனடியாகப் பகிரப்பட வேண்டும்.

வெப்ப – சுகாதார செயல் திட்டங்களை செயல்படுத்துவதை உறுதிசெய்து, வெப்பத்தை எதிர்கொள்வதற்காக திட்டமிடுவதிலும் நிர்வகிப்பதிலும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதிலும் மாநில, மாவட்ட மற்றும் நகர சுகாதாரத் துறைகள் முக்கிய பங்காற்ற முடியும். வெப்ப நோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க மருத்துவ அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அடிமட்ட ஊழியர்களிடையே மாநில சுகாதாரத் துறை முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அறிகுறி மற்றும் பாதிப்பை முன்கூட்டியே அங்கீகரிப்பது முக்கியம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.