“100 நாள் வேலைத் திட்டம்… பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் ஏழைகளின் வாழ்வு!” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் மத்திய பாஜக அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: “இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திமுக சார்பில் மார்ச் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நிறைவேற்றி, மக்கள் தொகையை மனிதவள ஆற்றலாகச் சிறப்பாக மாற்றியுள்ள தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தங்கள் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 5-ம் தேதி தமிழகத்தில் உள்ள 54 கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தியது.

அத்துடன் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை கடந்த 22-ம் தேதி சென்னையில் நடத்தி, ஒருமித்த உணர்வுடன் ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தோம். இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்திடச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் மத்திய பாஜக அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஏழை – எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.

சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற மத்திய பாஜக அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ம் தேதி பிரதமருக்குக் கடிதம் எழுதி, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக அந்த நிதியினை விடுவிக்கக் கோரியிருந்தேன்.

அதன் தொடர்ச்சியாகத் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உடன் கடந்த ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி உடன் நேரில் சந்தித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை மூலம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். தொடர்புடைய துறையின் அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழகத்துக்குரிய நிதியை மத்திய பாஜக அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழகத்தை ஓரங்கட்ட நினைக்கிறது. இந்தநிலையிலும் திராவிட மாடல் அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை வழங்கி வருகிறது. எனினும், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை – எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை.

தமிழகத்தைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசினா். உத்தர பிரதேசத்தைவிட தமிழகத்துக்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது என்று திசைதிருப்பும் பதில்களே மத்திய பாஜக அரசிடமிருந்து கிடைத்தது.

மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது மத்திய பாஜக அரசு. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் திமுக எம்.பிகள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக் கோரி, தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். பெருமளவில் இதில் பாதிக்கப்பட்ட மக்களை பங்கெடுக்கச் செய்ய வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.