கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 56 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைதீர்ப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை, 52,36,844 குறைதீர்ப்பு மனுக்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதே காலத்தில் ஏற்கெனவே நிலுவையில் இருந்த மனுக்களுடன் சேர்ந்து 56,63,849 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நிலவரப்படி மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 59,946 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
ஊரக பகுதி மக்களும் இந்த வசதியை பெற, குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு பொது சேவை மையங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள 5.1 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம் தங்கள் குறைகளை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம். கடந்த மார்ச் 20-ம் தேதி வரை பொது சேவை மையங்கள் மூலம் 4.91 லட்சம் குறைதீர்ப்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறைதீர்ப்புக்கான சராசரி காலம் கடந்த ஆண்டில் 13 நாட்களாக இருந்தது.
பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணையதளம் மூலம் இந்தாண்டில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை 3,27,395 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த ஐஐடி கான்பூருடன் கடந்த 2021-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் நுண்ணறிவு குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பை தொடங்க வழிவகுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இந்த அமைப்பு, குறைதீர்ப்பு முறையை மேம்படுத்தும். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.