தினமும் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்கள் இதனால் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. இந்த சிக்கல்கள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. தனியார் நிறுவனங்களின் புதிய முயற்சி ஸ்பேம் கால்களை கட்டுப்படுத்துவதுடன், பல்வேறு வகையில் நாம் பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா வழங்கும் CNAPஅம்சம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மொபைல் பயனர்களுக்கு ஸ்பேம் கால் பிரச்சனையில் இருந்து பெரும் நிவாரணம் பெற உதவும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் புதிய அம்சத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண பயனர்கள் எந்த மூன்றாம் தரப்பு செயலியையும் நாட வேண்டியதில்லை.
இதுவரை, TrueCaller போன்ற செயலிகள் அழைப்பாளர்களின் பெயரைக் காண்பிக்கும் வசதியை அளித்து வருகின்றன. ஆனால், இப்போது அவற்றைப் பதிவிறக்க வேண்டிய அவசியம் இருக்காது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் இந்த புதிய சேவை TrueCaller போன்று செயல்படும்.
நாட்டின் மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா ஆகியவை தங்களது கோடிக்கணக்கான பயனர்களுக்கு கொண்டு வரும் இந்த புதிய அம்சத்தின் பெயர் New Caller Name Presentation. அதன் மூலம், பயனர்கள் அழைப்பவரின் பெயரை அறிந்து கொள்ள முடியும்.
புதிய அழைப்பாளர் பெயரை வெளிப்படுத்தும் அம்சத்திற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன. இந்த விற்பனையாளர்கள் டெலிகாம் நிறுவனங்களுக்கு மென்பொருள் மற்றும் தேவையான சர்வர்களை வழங்குவார்கள். இதற்காக டெலிகாம் நிறுவனங்கள் டெல், எரிக்சன், ஹெச்பி மற்றும் நோக்கியா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
CNAP என்பது அழைப்பாளர் அடையாளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சேவையாகும். இந்தச் சேவை தொடங்கப்பட்ட பிறகு, ஒரு பயனருக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த அழைப்பாளரின் பெயரை அவர் Truecaller போன்ற பயன்பாடுகள் இல்லாமல் கால வரும் போதே திரையில் பார்த்து விடலாம். CNAP மூலம் காட்டப்படும் பெயர் அந்த அழைப்பாளரின் சரிபார்க்கப்பட்ட பெயராக இருக்கும். அதாவது, சிம் கார்டு யாருடைய பெயரில் இருக்குமோ அதே பெயரில் திரையில் தோன்றும்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் CNAP அம்சத்தை முதன்முறையாக தொடங்குவது பற்றி பேசியது. அப்போது இந்த அம்சம் பல்வேறு கட்டங்களாக வெளியிடப்படும் என்று TRAI தெரிவித்துள்ளது. ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளை பெருமளவு கட்டுப்படுத்த CNAP உதவும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் CNAP அம்சத்தை செயல்படுத்துவதற்கான வேலையைத் தொடங்கியுள்ளன. இதற்குத் தேவையான உபகரணங்களை டெலிகாம் நிறுவனங்களும் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனங்கள் பல இடங்களில் அதன் சோதனைப் பணிகளையும் தொடங்கியுள்ளன. சோதனை முடிந்து, தொழில்நுட்பம் நிலையானதாக மாறிய பிறகு, நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும்.