பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்
இளைஞர்கள் வேலை வாய்ப்பு திறனை வளர்த்துக்கொள்ளவும், தங்களைத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தயார்ப்படுத்திக் கொள்ளவும் உதவும் வகையில் கடந்த 2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தை (PMIS) அறிவித்திருந்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில், இந்த திட்டம் 10 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024-25 நிதியாண்டில் மட்டும் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல்கட்ட விண்ணப்பம்
2024-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை முதல் கட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 6 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்தனர்.
இரண்டாம்கட்ட விண்ணப்பம்
இந்நிலையில், இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இந்த கட்டத்தில் 730 மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த இரண்டாம் கட்ட விண்ணப்பம் குறித்த முழு தகவலையும் இங்குப் பார்ப்போம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் வயது 21 முதல் 24 வரை இருக்க வேண்டும்.
* உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றவர்கள், பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றவர்கள் அல்லது பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.பார்மா போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
* IIT, IIM அல்லது IISER போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் CA அல்லது CMA தகுதி பெற்றவர்கள் இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற மாட்டார்கள்.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
* முழு நேரப் படிப்பிலும், முழு நேர வேலையிலும் இருக்கக்கூடாது.
* வீட்டு நபர்கள் யாரும் அரசு வேலையில் இருக்கக்கூடாது.
12 மாதத்திற்குத் தொழிற்பயிற்சி
தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் 12 மாதங்கள் அதாவது 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். இதில் குறைந்தது 6 மாதங்கள் நேரடிப் பணி அனுபவம் பெறும்படி பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலம் முடிந்த பின்னர் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

உதவித்தொகை
இத்திட்டத்தின் நிறுவனங்களில் தொழிற்பயிற்சியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகையாக அளிக்கப்படும். இதில் ரூ.4,500 அரசு தரப்பிலிருந்தும், ரூ.500 நிறுவனம் மூலமாகவும் அளிக்கப்படும். கூடுதலாக ரூ.6,000 பயிற்சிக் காலத்தில் ஒரு முறை மட்டும் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31, 2025
இணையதளம்: pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…