RR vs KKR : ராஜஸ்தான் ராயல்ஸ் செய்த மிகப்பெரிய தவறு – ஒப்புக்கொண்ட கேப்டன் ரியான் பராக்

Rajasthan Royals, Riyan Parag : இந்த ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை அதுவும் மிக மோசமாக தோற்றிருக்கும் அணி என்றால்  அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான். முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஒப்பிடும்போது கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் படுமோசமாக விளையாடிய காரணத்தினாலேயே அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அதுவும் இப்போது அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரியான் பராக்கின் பேட்டிங் படுமோசம். 

ஆனால் அவரை எப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திடீரென கேப்டனாக நியமித்தது என தெரியவில்லை. அது அந்த அணி நிர்வாகத்துக்கே வெளிச்சம். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் விளையாடும் என ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பு வரை கூறிவிட்டு, ஐபிஎல் தொடங்கியவுடன் முதல் மூன்று போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக இருப்பார் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்தது. அந்த அறிவிப்பையும் சஞ்சு சாம்சன் வாயாலேயே சொல்ல வைத்தது அந்த அணி நிர்வாகம். 

இப்படியொரு வேடிக்கையான முடிவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்த காரணத்தினாலேயே நடப்பு ஐபிஎல் 2025 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்திருக்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை சுட்டிக்காட்டினார்.

அவர் பேசும்போது பேட்டிங்கில் ராஜஸ்தான் பிளேயர்கள் சொதப்பியதாகவும், இன்னும் கூடுதல் ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தால் நிச்சயம் இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் கூறினார். பேட்டிங்கில் செய்த சொதப்பல் காரணமாகவே அணி தோற்றதாகவும், தனிப்பட்ட முறையில் நான் எனது விக்கெட்டை இழந்திருக்கக்கூடாது என்று ரியான் பராக் கூறினார். தன்னுடைய விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்ததால் அணிக்கு கூடுதலாக இன்னும் 20 ரன்கள் கிடைத்திருக்கும், அந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானதாக இருந்திருக்கும் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறினார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை டிகாக் விக்கெட்டை சீக்கிரம் எடுக்க வேண்டும் என பல பிளான்கள் போட்டோம். மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்தினோம். இருப்பினும் வெற்றிக்கு அது போதுமானதாக இருக்கவில்லை என ரியான் பராக் கூறினார். மேலும், கடந்த ஆண்டு 4வது இடத்தில் பேட்டிங் விளையாடினேன். இந்த ஆண்டு அணி நிர்வாகம் என்னை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யுமாறு அறிவுறுத்தியது. அதையே செய்கிறேன். அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை செய்கிறேன் என்றும் ரியான் பராக் கூறினார். 

முதல் இரண்டு போட்டிகளிலும் அணி நிறைய கற்றுக் கொண்டிருக்கிறது. தவறுகளை அடையாளம் கண்டிருக்கிறோம். நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம் என்றும் கூறினார் ரியான் பராக். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிச்சயம் இதே வழியில் பயணிக்காது, தோல்வியில் இருந்து மீளும் என்று அவர் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் சஞ்சு சாம்சனை கேப்டன் பொறுப்பில் இருந்து பொறுப்பில்லாமல் நீக்கியதற்காக ரியான் பராக்கையும், ஆர்ஆர் அணி நிர்வாகத்தையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.