Shardul Thakur: 'பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் மூலம் பௌலர்களுக்கு அநீதி'- ஷர்துல் தாக்கூர் காட்டம்

‘ஆட்டநாயகன் ஷர்துல் தாக்கூர்!’

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கி 200+ ஸ்கோர்களை அசால்ட்டாக எடுக்கும் சன்ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியில் 190 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. லக்னோ அணி மிகச்சிறப்பாக பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை கட்டுப்படுத்தியிருக்கிறது.

Shardul Thakur
Shardul Thakur

அதிலும் குறிப்பாக ஷர்துல் தாக்கூர் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். ஐ.பி.எல் இல் அவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு இதுதான். ஷர்துல் தாக்கூர் மெகா ஏலத்தில் ‘Unsold’ ஆகியிருந்தார். எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. லக்னோ அணியில் மோஷின் கான் திடீரென காயமடைய அந்த அணி ரீப்ளேஸ்மெண்ட் வீரராக ஷர்துல் தாக்கூரை அணிக்குள் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஷர்துலுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது.

‘ஜாகீர்கானின் அழைப்பு!’

ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஷர்துல் பேசுகையில், ‘ஐ.பி.எல் இல் ‘Unsold’ ஆன பிறகு எந்த அணியாலும் எடுக்கப்படுவேன் என நம்பவில்லை. ஐ.பி.எல் சமயத்தில் என்ன செய்யலாம் என திட்டமிட்டு கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதன்பிறகுதான் ரஞ்சி டிராபியில் ஆடிக்கொண்டிருந்த போது ஜாகீர் கானிடமிருந்து அழைப்பு வந்தது.

‘நாங்கள் உங்களை எங்களுக்கேற்ற ரீப்ளேஸ்மெண்ட் வீரராக பார்க்கிறோம். வேறு திட்டங்களை வைத்துக் கொள்ளாதீர்கள் தயாராக இருங்கள்.’ என்றார். அதன்பிறகுதான் ஐ.பி.எல் யை பற்றி யோசித்து ஐ.பி.எல் இல் ஆடும் மனநிலைக்கு வந்தேன். ஏலம் நடந்த அன்றைய நாள் எனக்கு சரியாக அமையவில்லை. ஆனாலும் என்னுடைய திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

Shardul Thakur
Shardul Thakur

அபிஷேக்கும் டிராவிஸ் ஹெட்டும்தான் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிக ரன்களை அடிக்கிறார்கள். அவர்கள் நிறைய ரிஸ்க் எடுத்து ஆடுகிறார்கள். அதனால் நானும் ரிஸ்க் எடுத்து வீச நினைத்தேன். அதற்கு பலன் கிடைத்தது.

‘பௌலர்களுக்கு அநீதி!’

இதுபோன்ற பிட்ச்களில் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் குறைவான உதவியே கிடைக்கிறது. பேட்டிங், பௌலிங் சமநிலையில் இருக்கும் வகையில் பிட்ச்கள் தயாரிக்கப்பட வேண்டும் என கடந்த ஆட்டத்தின்போது கூட சொல்லியிருந்தேன். இம்பேக்ட் பிளேயர் விதிக்குப் பிறகு 240-250 ரன்களை அணிகள் எளிதில் எட்டுகின்றன. அப்படி இருக்கையில் பிட்ச்களும் இப்படி தயார்செய்யப்படுவது பந்து வீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நான் பார்க்கிறேன்.’ என ஆதங்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.