‘லக்னோ வெற்றி’
ஹைதராபாத்தில் நடந்த லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஹைதராபாத் மைதானத்தில் 200+ ஸ்கோராக எடுத்துக் கொண்டிருந்த சன்ரைசர்ஸை 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி சிறப்பான முறையில் லக்னோ அணி வென்றிருக்கிறது.

‘ஹைதராபாத் பேட்டிங்!’
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக, டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் பண்டரியுடன் தனது ஆட்டத்தை தொடங்கினார் டிராவிஸ் ஹெட். இரண்டாவது ஓவரில் ஷர்துல் தாகூர் வீசிய முதல் பந்தில் கேட்ச் ஆகி அவுட் ஆனார் அபிஷேக் ஷர்மா. அதன் பிறகு களம் இறங்கிய இஷான் கிஷன் தாகூர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய நித்திஷ் ரெட்டி பொறுமையாக ஆடத் தொடங்கினார்.
மூன்று ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது ஹைதராபாத் அணி. நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என வழக்கமான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ட்ராவிஸ் ஹெட். ஒரு பக்கம் அவர் விளையாடிக் கொண்டிருக்க அவருடைய விக்கெட்டை வீழ்த்த லக்னோ அணி முயற்சி செய்துக் கொண்டே தான் இருந்தது. ஆறாவது ஓவரில் பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோர் டிராவிஸ் ஹெட்டுக்கு கேட்ச்சை தவறவிட்டனர். பவர்பிளேயின் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

எட்டாவது ஓவரில் பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தினால் க்ளீன் போல்ட் ஆகி அவுட் ஆனார் ட்ராவிஸ் ஹெட். அவர் ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்திருந்தார். அதன் பிறகு க்ளாசென் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். பன்னிரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் பிரின்ஸ் யாதவ் பௌல் செய்தபோது, நித்திஷ் ரெட்டி அடித்த பந்து பௌலரின் இடது கையில் பட்டு நேர் எதிரே உள்ள ஸ்டம்பில் பட்டது. அப்போது க்ளாஸன் கிரீசை விட்டு நகர்ந்து வந்திருந்ததால் அவுட் ஆனார். இதனால் க்ளாஸன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
15 வது ஓவரின் ரவி பிஷ்னோய் வீசிய முதல் பந்தில் நித்திஷ் ரெட்டி கிளீன் போல்ட் ஆனார். பிஷ்னோயின் பந்து நடு ஸ்டம்பை சிதறடித்தது. நித்திஷ் ரெட்டி 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 15 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி வந்த அனிகேட் வர்மா, 16 வது ஓவரில் திக்வேஷ் ரதி வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய அபினவ் மனோகர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய பேட் கம்மின்ஸ் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை அடித்து ஆவேஷ் கான் வீசிய பந்தினால் கேட்ச் அவுட் ஆனார். 18-வது ஓவரில் தாகூர் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் முகமது ஷமி. 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்கத்தில் பீல்டிங்கில் லக்னோ அணி சொதப்பி இருந்தாலும், லக்னோ அணியின் பவுலர்கள் ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பைத் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் வைத்திருந்தனர்.

‘லக்னோ சேஸிங்!’
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களம் இறங்கிய லக்னோ அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் ஆகியோர் களம் இறங்கினர். மிட்செல் மார்ஷை இம்பேக்ட் பிளேயராக லக்னோ அணி களம் இறக்கியது. இரண்டாவது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் மார்க்ரம் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் உடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்.
மூன்றாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஐந்தாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் என அதிவேகமாக விளையாடத் தொடங்கினார் நிக்கோலஸ் பூரன். 2025 ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நிக்கோலஸ் பூரன். இவர் இன்றைய போட்டியில் 18 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். பவர் பிளேவின் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ஏழாவது ஓவரில் ஜாம்பாவை இம்பேக்ட் பிளேயராக பவுலிங்கில் களம் இறக்கியது ஹைதராபாத் அணி.

ஒன்பதாவது ஓவரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார் நிக்கோலஸ் பூரன். அதன் பிறகு களம் இறங்கிய ரிஷப் பன்ட் 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். இரண்டு சிக்ஸர்கள், ஏழு பவுண்டரிகள் என 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ் பதினோராவது ஓவரில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய ஆயுஷ் பதோனி ஆறு பந்துகளில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஜாம்பா வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார். 15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது.
16 வது ஓவரில் அப்துல் சமத் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என விளாசினார். 17 வது ஓவரில் முதல் பந்தில் டேவிட் மில்லர் தனக்கே உரிய பாணியில் ஒரு பவுண்டரி விளாசி லக்னோ அணியை வெற்றி பெற செய்துள்ளார். ஹைதராபாத் அணி எப்படி முந்தைய போட்டியில் விளையாடினார்களோ அதுபோலவே லக்னோ இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளனர். லக்னோ அணி 17 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.